தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுக நிர்வாகிகள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விருப்பம் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களை கவனிக்க வைத்துள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைக்கும் பணியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார் எடப்பாடி.

அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் மற்றும் புதிய தலைமுறைக்கு பொறுப்புகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள்
அப்போது சில நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை அரசியலில் தீவிரமாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இளைஞரணி செயலாளர் அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் ஒன்றை வழங்கினால், இளம் தலைமுறையினரை அதிமுகவுடன் இணைக்க முடியும் என்று அவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மிதுன்
கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள், தற்போது அரசியல் களத்தில் இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதாகவும், அதிமுகவிலும் புதிய முகங்கள் முன்னிலைக்கு வர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதற்காக மிதுனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு அதில் விருப்பம் இல்லை என்றும், இந்த விவகாரம் குறித்து மேலும் யாரும் பேச வேண்டாம் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்கு கொண்டு வருவதில் அவர் தற்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் பரவியுள்ளது. இருப்பினும், அதன்பிறகு பேசிய துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியின் கருத்துகள் கூட்டத்தில் இருந்த நிர்வாகிகளை கவனிக்க வைத்துள்ளது.
கேபி முனுசாமி
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மிதுனுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்று சிலர் கூறுவது அவர்களது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மிதுன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்காலத்தில் முடிவு செய்தால், கட்சியின் நலன் கருதி அதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்ற கருத்தையும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரிசு அரசியல்
இந்த கருத்து அதிமுக வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், திமுக மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்த அதிமுக, தங்களது கட்சியிலும் குடும்ப வாரிசுகளை முன்னிலைப்படுத்தும் சூழல் உருவானால் அது அரசியல் ரீதியாக எதிரொலிக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர். மறுபுறம், கட்சிக்குள் உள்ள மற்றொரு தரப்பினர், மிதுன் நேரடியாக அரசியலுக்கு வந்தாலும் அது வாரிசு அரசியல் என்று பார்க்க முடியாது என்றும், அவர் தனது திறமையின் அடிப்படையில் செயல்பட்டால் அதிமுகவுக்கு புதிய தலைமுறை ஆதரவை பெற்றுத்தர முடியும் என்றும் வாதிடுகின்றனர்.
அதிமுக ஆதரவு
இதற்கிடையே, கடந்த தேர்தலில் அதிமுக ஆதரவு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களில் கூட பலர் வேறு கட்சிகளுக்கு வாக்களித்ததாக கூட்டத்தில் சில நிர்வாகிகள் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படாததும் அதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், மிதுனுக்கு உடனடியாக பொறுப்பு வழங்கப்படுமா என்பது தெளிவாக தெரியாத நிலையில், அவரை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் கட்சிக்குள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
பல்ஸ் பார்த்த பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தற்போது அதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தாலும், அவர் தான் கேபி முனுசாமி போன்றவர்கள் மூலம் இதுபோன்ற கருத்துகளை பேசவிட்டு மகனை கட்சிக்குள் கொண்டு வரலாமா? என பல்ஸ் பார்க்கிறார் என்றும், ஆதரவு இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம், எதிர்ப்பு வந்தால் பின்வாங்கி விடலாம் என நினைத்திருப்பதாகச் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications