அதிமுக கூட்டத்தில்.. தவெக கொடியை பார்த்து குஷியான எடப்பாடி பழனிசாமியா இது! விஜய்யை இப்படி பேசிட்டாரே
சென்னை: அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடியை பார்த்து, குஷியில் கொடி பறக்குதா.. என கேட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது விஜய்யை சரமாரியாக சாடியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை, அதிமுக கூட்டணியில் எப்படியாவது இணைத்துவிட வேண்டும் என்று எடப்பாடி யோசித்திருந்தார். ஆனால், அந்த கனவு கடைசி வரை பலிக்காமலேயே போனது.

எடப்பாடியின் கனவு
இருப்பினும் கனவு கண்ட சமயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய விஷயங்களும், இப்போது விஜய் குறித்து அவர் பேசி வருவதும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என, எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பிரச்சார பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் தவெக கொடி பறந்தது. இதை பார்த்து எடப்பாடி குஷியானார்.
"பாருங்க கொடி பறக்குது. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு. ஸ்டாலின் அவர்களே! இந்த ஆரவாரம் உங்கள் செவிகளை துளைக்கும்" என்று பேசியிருந்தார் எடப்பாடி.
கொடி பறக்குதா?
அத்துடன் நிற்கவில்லை. கரூர் நெரிசல் பலி விவகாரத்தில், விஜய் மீது பலரும் விமர்சனங்களை அடுக்கியபோது, அரசுக்கு எதிராக விமர்சனங்களை அடுக்கி, விஜய்யை பேக்அப் செய்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. "பொதுக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. எங்களுக்கு ஊடகங்கள் மூலம் வந்த தகவலின்படி நெரிசல் ஏற்பட்டபோது அங்கு மின் நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு தவெக 4 மாவட்டங்களில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அங்கு எல்லாம் மக்கள் கூட்டம் இருந்தது என்பதை ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
விஜய்க்கு சப்போர்ட்
தொலைக்காட்சியில் பார்க்கும்போதே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த அரசு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் பல ஆம்புலன்ஸ்கள் வந்தன. இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றெல்லாம் பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு பின்னால் இருந்தது ஒரேயொரு நோக்கம்தான். விஜய்யை எப்படியாவது கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. ஆனால், கடைசிவரை ந்த கனவு நிறைவேறவே இல்லை. போதாத குறைக்கு விஜய் அதிமுக மீது சரமாரியாக விமர்சனங்களை அடுக்கியிருக்கிறார்.
விஜய் மீது அட்டாக்
இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை சரமாரியாக தாக்கி பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. "விஜய் தேர்தல் களத்திற்கு வந்தால்தான் தெரியும். ஆனால் நாங்கள் அப்படி கிடையாது. அதிமுக பொன் விழா கண்ட கட்சி. 31 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தோம் என்பதை பட்டியல் போட முடியும். அதுபோல் விஜய் என்ன செய்திருக்கிறார். விஜய் நடிகர் என்பதால் ரசிகர்கள் கூடுவார்கள்.
கரூர் சம்பவம்
விஜய் சிறந்த நடிகர், அது எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், சிறந்த அரசியல் கட்சி அதிமுகதான். 51 ஆண்டு காலமாக நாங்கள் மக்கள் பிரச்சனையை அனுபவம் மூலம் கண்டறிந்துள்ளோம். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மிகப்பெரியது. விஜய்யின் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம் அது. நேரடியாக கரூர் மாவட்டத்திற்கு விஜய் சென்றிருக்க வேண்டும்.
நன்றாக சம்பாதித்த விஜய்
நாங்கள் உடனடியாக சென்றோம். எங்களால் முடிந்த உதவியை செய்தோம். 41 குடும்பங்கள் என்ன நிலையில் இருக்கும்? கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உங்களால் ஒரு ஆறுதல் கூட சொல்ல முடியவில்லையே! இதன்பின்னரும் கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள்? விஜய் சினிமாவில் இருந்தவரை நன்றாக சம்பாதித்தார்.
சாதாரண விஷயம் கிடையாது
எதையும் செய்யாமல், விட்டுட்டு வந்துள்ளேன் என்கிறார். யாருக்காக விட்டுட்டு வந்தீர்கள்? அரசியலில் அனுபவம் வேண்டும். சாதாரண விஷயம் அல்ல. விஜய் திட்டமிடாமல் போனதால் தான் 41 குடும்பங்கள் அனாதையாகிவிட்டது. ரசிகர் பட்டாளம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் பேச முடியாது. கொரோனா காலத்தின் போது விஜய் வெளியில் வந்தாரா?" என்று ஏகத்திற்கும் விஜய்யை கடுமையாக சாடியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணிக்காக காத்திருக்கும்போது ஒரு பேச்சும், கூட்டணி கிடையாது என்று தெரிந்தவுடன் இன்னொரு பேச்சும் பேசுவது குறித்து, எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனங்கள் வலுத்துள்ளன.












Click it and Unblock the Notifications