ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை வாபஸ் பெற முடியாது: அதிமுக ஓபிஎஸ் அணி திட்டவட்ட அறிவிப்பு!
ஈரோடு கிழக்கில் வேட்பாளரை வாபஸ் பெறுவது இல்லை என அறிவித்துள்ளது அதிமுக ஓபிஎஸ் கோஷ்டி.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை வாபஸ் பெற முடியாது என அதிமுக ஓபிஎஸ் அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இபிஎஸ், அதிமுக ஓபிஎஸ் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக இபிஎஸ் அணி சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் இரு அணி வேட்பாளர்களும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுகவை மையமாக வைத்து அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அதிமுகவின் இபிஎஸ் அணி, இரட்டை இலை சின்னத்தை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது; இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்வார் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, அதிமுகவின் இரு அணிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பிப்ரவரி 7-ந் தேதி வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இதேபோல் அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அறிவித்து கொள்ளும் சசிகலாவும், அதிமுக அணிகள் ஒருங்கிணையும் சூழ்நிலை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது. அதிமுக தனித்தனியாக இருந்தால் கட்சிக்கு நல்லது இல்லை. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். அதற்கான காலம் நெருங்கிவிட்டது என கூறியிருந்தார்.
ஆனால் அதிமுக இபிஎஸ் அணியின் பொன்னையன், பாஜகவிடம் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக தனித்துதான் போட்டியிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருக்கிறதா? என்ற கேள்விக்கே பொருள் இல்லை என கூறியிருந்தார். இதனால் பாஜகவை அதிமுக இபிஎஸ் அணி நிராகரிப்பதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறவே மாட்டோம். எங்கள் தலைவர் ஓபிஎஸ், எப்போதும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைவர்கள் இன்று சந்தித்தது தார்மீக ரீதியானது என்றார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை அதிமுக அணிகள், பாஜக இணைந்து நிறுத்துமா? என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றார் கு.ப.கிருஷ்ணன்.
தற்போதைய நிலையில் அதிமுக ஒருங்கிணைவதையே பாஜக விரும்புகிறது; ஆனால் அதிமுக இபிஎஸ் அணி இதனை ஏற்க மறுக்கிறது. இதனால் அதிமுக ஓபிஎஸ் அணி, பாஜகவை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications