ஈரோடு கிழக்கில் வாக்கு வங்கியை தக்க வைத்த நாம் தமிழர்! அதிர்ச்சியில் அதிமுக, தேமுதிக! குஷியில் திமுக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது. மேலும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெறாதோ என கருதிய நிலையில் மேனகா அந்த தேர்தல் வாக்குகளை நெருங்கிவிட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த ஒரு மாதமாக ஏதோ திருவிழா போல் விழாக் கோலம் பூண்டிருந்தது. அந்த தொகுதி மக்களுக்கு பணம், பரிசு பொருட்கள், கொலுசு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவைகளை சில அரசியல் கட்சிகள் கொடுத்ததாக கூறப்பட்டன.
அது போல் மக்களுக்கு காதணி விழா என்ற பெயரில் கறி சோறு போட்டு நல்ல கவனிப்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது புகார்கள் சென்றன. தேர்தல் ஆணையமும் தீவிர கண்காணிப்பில் இருந்தது.

தேர்தல்
இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி இந்த தேர்தல் நடந்தது. 70-க்கும் மேல் வாக்கு சதவீதம் பதிவாகியிருந்தது. தேர்தல் நேரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடு நன்றாக இருந்ததாக கூறியிருந்தனர். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுடன் 73 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை
இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றார். அந்த தொகுதி வரலாற்றில் முதல்முறையாக ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சம் வாக்குகளை கடந்தார். மேலும் வாக்கு வித்தியாசமும் அதிகம். தனது மகன் பெற்ற வாக்குகளை விடவும் 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.

அதிமுக வாக்கு வங்கி
அது மட்டுமல்லாமல் அதிமுகவின் வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்துவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் பெற்ற வேட்பாளரைவிட குறைந்த வாக்குகளையே அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றிருந்தார். அது போல் தேமுதிகவின் வாக்குகளும் கடுமையாக சரிந்தன. 2000 வாக்குகளை கூட பெறுவதற்கு தேமுதிக திணறியது.

தேமுதிக நாம் தமிழர்
இந்த தேர்தலில் நாம் தமிழரும், தேமுதிகவும் டெபாசிட்டை இழந்தனர். இதில் என்ன ஒரு ஆறுதல் என்றால், நாம் தமிழர் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அதன் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது. கடந்த பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர் கோமதி 11,629 வாக்குகளை பெற்றார். இந்த இடைத்தேர்தலில் மேனகா 10627 வாக்குகளை பெற்றார்.

ஆறுதலான விஷயம் இதுதான்
மேலும் தேமுதிகவை 4ஆவது இடத்திற்கு தள்ளிவிட்டு 3 ஆவது இடத்தை நாம் தமிழர் பிடித்தது. முந்தைய தேர்தலை விட வெறும் 1002 வாக்குகள் மட்டுமே குறைவாக இருந்தது. ஈரோடு கிழக்கு கடந்த முறை நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 7.64 சதவீதமாக இருந்தது. அது போல் இந்த முறை அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 6.2 ஆகும். தேமுதிக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவுக்கும் ஏற்கெனவே எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவுக்கும் வாக்கு சதவீதம் குறைந்தது பெரும் அதி்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நாம் தமிழருக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. இதனால் சீமானின் தம்பிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications