விடக்கூடாது.. மோதி பார்க்க தயாராகும் ஓபிஎஸ்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எகிறும் எதிர்ப்பார்ப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை த.மா.கா. கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு அந்த தொகுதியை த.மா.கா. விட்டுக்கொடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் நாளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் ஒபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்தது.
இதனால், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையேயான பிளவு வெட்ட வெளிச்சமானது. கடந்த ஜுலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்
ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என்று ஒபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பு
இதில் காங்கிரஸ் போட்டியிடும் என தி.மு.க. கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக போட்டியிட விரும்புவதாக கூறி கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடுவது நிச்சயம் ஆகியுள்ளது. தங்கள் தரப்பு பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தேர்தலை எடப்பாடி பழனிசாமி தரப்பு பார்க்கிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தங்கள் பலத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்த தேர்தலை பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிமுக சார்பில் இந்த தேர்தலில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு இன்னும் தங்கள் தரப்பு முடிவு என்ன என்பதை அறிவிக்கவில்லை. வரும் 23 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஓபிஎஸ் தனது செல்வாக்கை காட்டும் வகையில்
இந்தக்கூட்டத்தில் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நாளை காலை ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்கலாம் எனத்தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடுவதால் கண்டிப்பாக ஓபிஎஸ் தனது செல்வாக்கை காட்டும் வகையில் இதில் களம் இறங்க முடிவு செய்யலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

என்ன முடிவை எடுப்பார்கள்?
இதற்கிடையே, தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி தற்போது வரை அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் தான் உள்ளது. எனவே இருவரும் கையெழுத்து இட்டால் தான் சின்னம் கிடைக்கும். அப்படியான ஒரு சூழல் தற்போது இல்லை.எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 2 தரப்பினரும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த நினைக்கும் களமாக இடைத்தேர்தலை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் விரும்பும் பட்சத்தில் 2 தரப்பினரும் என்ன முடிவை எடுப்பார்கள்? என்ற ஐயமும் உள்ளது.

நாளை தெரிந்துவிடும்
நாளை காலை ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து தனது தரப்பு நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என்று தெரிகிறது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி - எடப்பாடி அணியுடன் மல்லுக்கட்டுமா? என்பது நாளை கிட்டத்தட்ட தெரிந்துவிடும் என்பதே அரசியல்நோக்கர்களின் கருத்தாக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நகர்த்தி வரும் காய்கள் அதிமுக வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications