ஈரோடு கிழக்கு: திமுக vs நாதக மோதல்- அதிமுக, பாஜக, தமாகா வாக்குகள் என்னவாகும்? பெரும் எதிர்பார்ப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் திமுகவும் இதுவரை எந்த ஒரு தேர்தலிலுமே வெற்றி பெறாத சீமானின் நாம் தமிழர் கட்சியும் நேரடியாக மோதுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்டவை தேர்தலைப் புறக்கணித்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கப் போகும் வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவானது. ஈரோடு மாநகரின் ஈரோடு வட்டம் மற்றும் ஈரோடு நகராட்சி, வீரப்பன் சத்திரம் பேரூராட்சி, பிராமண பெரிய அக்ரஹாரம் பேரூராட்சி ஆகியவற்றக் கொண்டதாக உருவானதுதான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி.

2011 தேர்தலில் அதிர்ச்சி முடிவு
இத்தொகுதி முதல் முறையாக 2011-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக 10,644 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான இன்றைய திமுக அமைச்சர் முத்துசாமியை புது முகமான தேமுதிகவின் விசி சந்திரகுமார் தோற்கடித்தார். தற்பொதைய ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக விசி சந்திரகுமாரும் அவருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமியும் பிரசாரம் செய்வதும் குறிப்பிடத்தக்கது. 2011-ம் ஆண்டு விசி சந்திரகுமார் 69,186 வாக்குகளையும் திமுகவின் முத்துசாமி 58,522 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
செல்வாக்கை நிரூபித்த சந்திரகுமார்
2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் தேமுதிக என்ற பெயரில் விசி சந்திரகுமார் போட்டியிட்டார். அத்தேர்தலில் அதிமுகவின் தென்னரசு 64,879 வாக்குகளைப் பெற்றார். தேமுதிகவை விட்டு வெளியேறி தனி கட்சி தொடங்கிய போதும் விசி சந்திரகுமார் 57,085 வாக்குகளைப் பெற்றிருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த வாக்குகள் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமக்கு தனித்த செல்வாக்கு இருக்கிறது என்பதையும் விசி சந்திரகுமார் நிரூபித்திருந்தார்.
காங்கிரஸ் அதிரடி வெற்றி
2021-ம் ஆண்டு இத்தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தது திமுக; அதேபோல அதிமுக- பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு கொடுக்கப்பட்டது. இரு காங்கிரஸ் கட்சிகளும் மோதிய 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளையும் தமாகாவின் யுவராஜா 58396 வாக்குகளையும் பெற்றார். அதாவது அதிமுக, பாஜக வாக்குகளையும் சேர்த்து தமாகாவின் யுவராஜ் இந்த வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்
திருமகன் ஈவெரா மறைவால் 2023-ல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போதும் காங்கிரஸுக்கு திமுக விட்டுக் கொடுத்தது. காங்கிரஸ் வேட்பாளராக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். அத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளையும் அதிமுகவின் தென்னரசு 43,981 வாக்குகளையும் பெற்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.
தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
சரிந்து போன அல்லது தாவிய அதிமுக ஓட்டுகள்
2021, 2023-ம் ஆண்டு தேர்தல்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வாக்குகள் பெருமளவு சரிவை சந்தித்திருக்கிறது. 2016-ல் அதிமுகவின் தென்னரசு 64,879 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் 2021-ல் அதிமுகவின் கூட்டணி வேட்பாளர் அதிமுக பெற்ற வாக்குகளை விட குறைவாக 58,396 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். அதிமுகவுக்கு 2016-ல் கிடைத்த வாக்குகள் இயல்பாகவே காங்கிரஸுக்கு மாறிப் போயிருந்தன. 2023-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் தென்னரசுதான் மீண்டும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தென்னரசுவால் 43,981 வாக்குகளயே பெற முடிந்தது. சுமார் 20,000 வாக்குகள் இயல்பாகவே காங்கிரஸுக்கு மாறிப் போயின. அத்துடன் இதர கட்சிகள், நடுநிலை வாக்காளர்களும் 2023-ல் காங்கிரஸுக்கு வாக்களித்ததால் பிரம்மாண்ட வெற்றியை அக்கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றார்.
திமுக- நாம் தமிழர் மோதல்
தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக- அதன் கூட்டணி கட்சியான போட்டியிடவில்லை; பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான தமாகாவும் போட்டியிடவில்லை; திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதுகின்றன.
அதிமுக, பாஜக, தமாகா ஓட்டுகள் எங்கே போகும்?
கடந்த தேர்தல்களில் அதிமுகவின் வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்தன; இந்த தேர்தலில் அதிமுக, தமாகா, பாஜக, தேமுதிகவின் வாக்குகள் திமுகவுக்கு கிடைக்குமா? அல்லது ஒட்டுமொத்தமாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து திமுகவை மிரட்டுமா? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு. திமுகவைப் பொறுத்தவரை எளிதாக வெல்ல முடியும் என்கிற பெரும் நம்பிக்கையில் இருக்கிறது. அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தேமுதிக, மக்கள் தேமுதிகவில் இருந்த போது கணிசமான வாக்குகளைப் பெற்று தமது செல்வாக்கை நிரூபித்திருந்தார். அந்த செல்வாக்கு தற்போதும் இருக்குமானால் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகளைவிட அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். இன்னொரு பக்கம், நாம் தமிழர் கட்சியோ எப்படியாவது திமுகவை அச்சுறுத்தும் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக பெரியாரை இழிவுபடுத்தி பேசுகிற அதீத இறுதி எல்லை வரைக்கு சென்றுவிட்டது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று பதிவாகும் வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கின்றன.












Click it and Unblock the Notifications