Exclusive: தோழர்கள் மீது அப்பாவுக்கு மரியாதை உள்ளது... சர்ச்சைக்கு விளக்கம் தந்த எ.வ. கம்பன் வேலு..!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் அவரது மகன் எ.வ.கம்பன் வேலு.
கடந்த வாரம் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் சென்னையில் முகாமிட்டிருந்ததால், முக்கிய அமைச்சர்களை சந்தித்து தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவும் தனது தொகுதி சார்ந்த கோரிக்கைகளை மனுவாக எழுதி எடுத்துக்கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு சென்னையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது கோரிக்கை மனு அளித்த மாரிமுத்து எம்.எல்.ஏ.விடமிருந்து ஒற்றை கையில் இருக்கையில் அமர்ந்தவாறு அமைச்சர் எ.வ.வேலு மனுவை பெற்றார். இது தொடர்பான புகைப்படம் வெளியானதை அடுத்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வை அமைச்சர் அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமறிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை தொடர்பு கொண்ட போது அவரது மகனும் திமுக மருத்துவரணி நிர்வாகியுமான எ.வ.கம்பன் விளக்கம் அளித்தார்.
'' அப்பாவை பொறுத்தவரை தோழர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அப்பாவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும் நல்ல நண்பர்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் தினமும் அப்பாவிடம் நூற்றுக்கணக்கானோர் மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.''

''அப்படி மனு கொடுக்க வருபவர்களில் ஒரு சிலர் தங்களை பற்றி அறிமுகம் செய்துகொள்வதில்லை. மனுவை கொடுத்தவுடன் சென்றுவிடுவார்கள். இதனிடையே இப்போது எல்லோரும் முகக்கவசம் அணிந்து வருவதால் உடனடியாக அடையாளம் காண்பது அப்பாவுக்கு சிரமமாக இருந்திருக்கலாம். நான் அப்போது கூட இல்லை, இது மாதிரி என்று தகவல் சொன்னார்கள். ''
''தற்போதைய சூழலில் ஏற்கனவே அறிமுகமான நபர்களை கூட முககவசம் அணிவதால் இன்னார் என்று கண்டறியமுடிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் அறிமுகம் இல்லாத நபரை அதுவும் முககவசம் அணிந்த நிலையில் அடையாளம் காண்பது பொதுவாகவே கொஞ்சம் சிரமமாக தான் இருக்கிறது. இதை இந்த நிகழ்வுக்காக கூறவில்லை, பொதுவாகவே இது தான் நிலை. மற்றபடி இந்த நிகழ்வில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.''












Click it and Unblock the Notifications