சீனா கூட நினைச்சு பார்க்க முடியாத சாதனை.. தமிழ்நாடு செய்த அசாத்திய சம்பவம்.. அண்ணாந்து பார்க்குறாங்க
சென்னை: பொருளாதார வளர்ச்சி ரீதியாக தமிழ்நாடு ஒரு சிறப்பான மாநிலமாக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக சீனா கூட செய்யாத சாதனையை தமிழ்நாடு படைத்து வருகிறது.
தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) $4000 ஆக இருக்கும் நிலையில், 11.19% உண்மையான வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது வியத்தகு ஒன்றாகும்.

சீனாவை விட வேகமான வளர்ச்சி
சீனாவின் வரலாற்றில், அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $3500ஐ தாண்டிய பிறகு, 11%க்கும் அதிகமான உண்மையான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்ததே இல்லை. பொரும்பாலும் 10க்கு கீழ்தான் இருந்துள்ளது.
ஆனால் தமிழ்நாடு 11%ஐ தாண்டி சென்றுவிட்டது. இந்த புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி, அமைப்பால் சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு தெளிவான உதாரணமாக விளங்குகிறது. முக்கியமாக சீனா கூட செய்யாத சாதனையை தமிழ்நாடு படைத்து வருகிறது.
தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி இதே வேகத்தில் நீடித்தால், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மகாராஷ்டிராவை ஜிடிபியில் தமிழ்நாடு முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19% ஆக இருக்கும். இது தமிழ்நாடு அரசு முதலில் கணித்த 9% வளர்ச்சியை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.
இரட்டை இலக்க வளர்ச்சி
இந்த மகத்தான வளர்ச்சி குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா... அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!" என்று தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, 2010-11 நிதியாண்டில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருந்தது. தற்போதும் திராவிட மாடல் ஆட்சி இந்த சாதனையை மீண்டும் நிகழ்த்தியுள்ளது. "2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. 'இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?' என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!" என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)" என்ற குறளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு வளர்ச்சி சாதனை
இந்த வேகத்தில் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ந்தால், அடுத்த ஆறு ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டும். அதே நேரத்தில், மகாராஷ்டிரா அதன் தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் இந்த இலக்கை அடைய ஏழு ஆண்டுகள் ஆகும். இதன் மூலம், தமிழ்நாடு மகாராஷ்டிராவை விட ஒரு வருடம் முன்னதாக 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் மற்ற சில மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்கள்: உத்தரப் பிரதேசம் (8.99%), ஆந்திரப் பிரதேசம் (8.21%), தெலங்கானா (8.08%), கர்நாடகா (7.37%), மகாராஷ்டிரா (7.27%). இந்த ஒப்பீட்டில் தமிழ்நாடு வளர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாடு கடைசியாக 2010-11 நிதியாண்டில் 13.12% வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதன் பிறகு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்யவில்லை. தற்போது மீண்டும் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த இரண்டு முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) ஆட்சியில் இருந்தது.
தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி
சென்னை பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், சேவை மற்றும் இரண்டாம் நிலைத் துறைகளின் சிறப்பான செயல்பாடே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டினார். சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 9.69% ஆக இருந்தது. தற்போது இது சுமார் 1.5 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதன் மூலம், தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. கோவா, குஜராத், மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்கள் உட்பட ஆறு மாநிலங்களின் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மற்ற எந்த மாநிலமும் இதே இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில், மாநிலத்தின் பெயரளவு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 14.5% ஆகவும், உண்மையான வளர்ச்சி 9% ஆகவும், சராசரி பணவீக்கம் 5% ஆகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், தற்போதைய உண்மையான வளர்ச்சி பட்ஜெட் மதிப்பீட்டை விட சுமார் 2.2% அதிகமாக உள்ளது. நிலையான விலைகளில் (அடிப்படை ஆண்டு: 2011-12), 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ₹17,32,189 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டில் ₹15,57,821 கோடியாக இருந்தது.












Click it and Unblock the Notifications