‛நகைச்சுவையை திரிக்காதீங்க’’.. நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என கூறியது ஏன்? ஆர்எஸ் பாரதி விளக்கம்
சென்னை: "குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது’’ என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசியிருப்பது சர்ச்சையான நிலையில் அவர் சார்பில் எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் மூத்த தலைவராக இருப்பவர் ஆர்எஸ் பாரதி. இவர் திமுகவின் அமைப்பு செயலாளராக உள்ளார். இந்நிலையில் தான் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஆர்எஸ் பாரதி பங்கேற்று பேசியது சர்ச்சையானது. அதாவது ஆர்எஸ் பாரதி அந்த ஆர்ப்பாட்டத்தில் கூறிய கருத்துகள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்எஸ் பாரதி, ‛‛குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது’’ என தெரிவித்தார்.
இதையடுத்து திராவிட இயக்கம் போட்ட பிச்சை, நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது உள்ளிட்ட அவரது வார்த்தைகள் சர்ச்சையாகின. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியான நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் திமுக மற்றும் ஆர்எஸ் பாரதியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த விளக்கம் என்பது ஆர்எஸ் பாரதி சார்பில் இன்னொருவர் எழுதி பதிவிட்டுள்ளது போன்று இருக்கிறது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளவதாவது: ‛‛குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது.’’
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சின் ஒரு பகுதி இது. “சனாதனம் படிக்க விடவில்லை. கோத்திரமும், குலப் பெருமையும் படிக்க வைக்கவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினர் படிக்கவிடவில்லை. நாங்கள் படித்திருக்கும் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று தன்னை முன்னிறுத்தி பேசினார் ஆர்எஸ் பாரதி.
வழக்கம் போல் அவருடைய பேச்சை திரித்து சர்ச்சையாக்க ஊடகங்கள் முயல்கின்றன. அதில் இன்னொரு வரியைப் பிடித்துக் கொண்டு இப்போது தலைப்பில் போடுகிறார்கள். “இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது” என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள். தன்னையொத்த பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் வளர்ச்சியை இப்படிச் சொல்லும் நோக்கம் அவருக்கில்லை என்பதைத் திராவிட இயக்கத்தை உளப்பூர்வமாகப் புரிந்தவர்கள் அறிவார்கள்.
ஆனால், உண்மையிலேயே அவர் சொன்ன செய்தி நடந்த ஒன்று தானே! நாய் டிகிரி வாங்கிய செய்தியை இவர்கள் படித்தார்களா, இல்லையா? கடந்த ஆண்டு ஊடகங்களில் வந்த செய்தி தானே இது! அமெரிக்காவில் ஜஸ்டின் என்ற நாய் டிப்ளோமோ வாங்கியதே! அது ஒரு செய்தி. இதுபோல ஏராளமான நிகழ்வுகள் மேற்குலகில் உண்டு.போகிற போக்கில் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டிவிட்டுப் போகிறார். ஊடகங்கள் அதைப் பிடித்துக் கொண்டு அவர் சொல்ல வந்த ஆதிக்க எதிர்ப்புச் செய்தியை, கோபத்தைப் பின்னுக்குத் தள்ளி திரிக்கின்றன.
அவர் பேச வந்தது கல்வியை இழிவுபடுத்தவா? "ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது." என்று நீட் தேர்வையும், இத்தனைக் காலம் நம்மைப் படிக்கவிடாமல் செய்த ஆரியத்தை எதிர்த்துப் பேசுவதைத் திரித்து ஊடகங்கள் வெளியிடுவது அயோக்கியத்தனம் ஆகும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications