ஓபி சீட்டுக்கூட எய்ம்ஸ்ல காசு..கலைஞரில் இதய ஆபரேஷன்கூட இலவசம்!
சென்னை: பதினைந்தே மாதங்களில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் தனது ஆட்சிக்காலத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதை உணர்ந்த நெட்டிசன்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எனக் குறிப்பிட்டு ஒருபக்கம் செங்கல் புகைப்படத்தையும் மற்றொரு பக்கம் கிண்டி கலைஞர் மருத்துவமனைப் புகைப்படத்தைப் போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

மருத்துவமனையைத் திறந்து வைத்த பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "அடிக்கல் நாட்டிய 15 மாதங்களுக்குள் இந்த மருத்துவமனைக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதலில் 500 படுக்கைகள் வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டோம். பின்னர் 1000 ஆக மாற்றினோம்.
இந்த மருத்துவமனை 'ஏ', 'பி', 'சி' என 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவு புறநோயாளிகள் மற்றும் நிர்வாக அலுவலகமாகச் செயல்பட உள்ளது. 'பி' பிரிவு அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவாகச் செயல்படும். 'சி' பிரிவு எக்ஸ்ரே மற்றும் உள் நோயாளிகளுக்காகச் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையின் அடித்தளம் மருந்துகள் சேமிப்பகமாகச் செயல்பட உள்ளது. தரைதளமானது அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் தளமானது அறுவை சிகிச்சைக்கான வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் 2வது தளம் பொது வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. 3வது தளமானது புற்றுநோய் மருத்துவச் சிகிச்சைப் பிரிவாகச் செயல்பட உள்ளது. 4வது தளத்தில் தனி அறைகள் மற்றும் ரத்த வங்கியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 5வது தளத்தில் மயக்க மருந்தியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 6வது தளத்தில் தொடர் சிகிச்சைக்கான வார்டுகள் செயல்பட உள்ளன.
இவை தவிர மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்பு வசதிகளையும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வளாகத்தில் 10 மின்தூக்கிகள் உள்ளன. சலவைக் கூடங்கள் கூட உள்ளன. உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி அதிநவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனையை மிகப் பிரம்மாண்டமாகக் கட்டித் தந்துள்ளோம்" என்று பெருமை பொங்கப் பேசியுள்ளார்.

இம்மருத்துவமனையைக் குறித்து சுகாதார செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசினோம். அவர், "புற்றுநோய், நியூராலஜி ஸ்பெசலிஸ்ட் & நியூரோ சர்ஜரி, சர்ஜிகல் ஆன்காலஜி , கேஸ்ட்ரோ எண்டோமொலஜி போன்ற 12க்கும் மேற்பட்ட உயர் அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 146 கோடி ரூபாய்க்கு அதிநவீன மருத்துவ உபகரணங்களை அரசு வாங்கி உள்ளது. அறுவை சிகிச்சைக்காக சுமார் 10 ஆபரேஷன் தியேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இல்லாமல் மைனர் சர்ஜரி செய்வதற்காக 3 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன.

இந்தக் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை முற்றிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலிருந்து மாறுபட்டது. இங்கே அதிநவீன அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படும்.
மிகச் சாதாரணமான நோயாளிகளுக்கு இங்கே இடமில்லை. அதாவது தலைவலி, வயிற்று வலி என அன்றாடம் அனுபவிக்கக் கூடிய சாதாரண நோயாளிகளுக்கான மருத்துவமனை இது அல்ல. முழுக்க முழுக்க மிகப் பெரிய அறுவை சிகிச்சைகள் மட்டுமே இங்குச் செய்யப்படும்.
இப்போதைக்கு 130 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். உதாரணமாகப் புதுக்கோட்டையில் டீன் ஆக இருந்த டாகடர் பார்த்தசாரதி, இங்கே இயக்குநராகப் பணி மாறுதல் பெற்று வந்துள்ளார்.
இவரைப் போலவே சென்னை மற்றும் வேறு மாவட்டங்களிலிருந்து அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இங்குப் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செவிலியர்கள், பிற மருத்துவர்கள் எனப் பலரையும் பணி அமர்த்தியுள்ளோம்.
அனுபவம் நிறைந்த மருத்துவர்களைப் பிற மாவட்டங்களிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டதால், அவர்கள் பார்த்துவந்த பணியிடங்கள் காலியாகி உள்ளன. அந்த இடங்களுக்கு வேறு அனுபவம் நிறைந்தவர்களை நிரப்ப உள்ளோம்.

மேலும் புதியதாக மருத்துவர்களைப் பணி நியமனம் செய்யவும் உள்ளோம்" என்கிறார்.
மேலும் சில விவரங்களைக் கேட்பதற்காகக் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை டாக்டர் ரவிக்குமார், "தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறையைப் பொருத்தவரை என்ன நினைத்தாலும் நம்மால் செய்ய முடியும். காரணம், அந்தளவுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் நிறைய உள்ளன.
அதைப்போன்று மருத்துவர்கள் நிறைய உள்ளன. சுமார் அரசு மருத்துவர்கள் 20 ஆயிரம் பேர் உள்ளனர். அதை வைத்துதான் சொல்கிறேன், நாம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று.
அடுத்த விஷயத்திற்கு வருவோம். எல்லா ஊர்களிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உள்ளன.

ஆனால், அவை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அதை உணர்ந்துதான் அரசே ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்கி இருக்கிறது. அதுவும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
இன்றைய நிலைமையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால், குறைந்தது 25 லட்சம் ஆகும். ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், ஒரு கோடி ரூபாய் ஆகும். உங்களுக்கு உறுப்பு தானம் செய்யக் கூடிய நபரையும் கொடுத்து, அறுவை சிகிச்சையையும் இலவசமாகச் செய்ய முன்வந்திருக்கிறது நம் தமிழ்நாடு அரசு.
நான் தெளிவாக ஒன்றை உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். எய்ம்ஸ் போன்ற ஒன்றிய அரசின் மருத்துவமனைகளில் எல்லாவிதமான சிகிச்சைகளுக்கும் தோராயமான ஒரு தொகையை நிர்ணயித்திருக்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையில் எதுவே இலவசம் கிடையாது. ஓபி டிக்கெட் கூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.
அது அரசு மருத்துவமனைதானே ஒழிய, முற்றிலும் இலவசம் இல்லை. மருந்துகள் கூட பணம்தான். என்ன மருத்து என்பதை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். நோயாளிகள் வெளியே போய் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பாண்டிச்சேரியில் உள்ள ஒன்றிய அரசின் மருத்துவமனையான ஜிப்மரில் கூட இதே நடைமுறைதான். அதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், நம் மாநிலத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனைகளிலும் பணம் வசூலிக்கப்படுவதில்லை. முற்றிலும் இலவசமான சிகிச்சையைத்தான் அளிக்கின்றோம்.

ஒரு நோயாளிக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், அவருக்கு மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவச் செலவே ஆகும். அந்த மாத்திரையைக்கூடத் தமிழ்நாடு அரசு இலவசமாகக் கொடுக்கின்றது. ஆனால், எய்ம்ஸ் தராது.
டயாலிஸ் செய்வது கூட அப்படித்தான். ஒரே முறையோடு நின்றுவிடாது. வாரம் தோறும் மாதம் தோறும் தொடர்ந்து செய்ய வேண்டும். அதைத் தமிழ்நாடு அரசு இலவசமாகவே செய்கிறது.
ஆக, எப்படிப் பார்த்தலும் கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை என்பது ஏழைகளுக்கும் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகச் செயல்பட இருக்கிறது. இது மிகப் பெரிய வரப் பிரசாதம்" என்கிறார்












Click it and Unblock the Notifications