அந்த ஏர்போர்ட்டை நகர்த்தி ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுவில் வையுங்க! ஈவிகேஎஸ்ஸால் அவையில் சிரிப்பு
சென்னை: சேலம் விமான நிலையத்தை சங்ககிரிக்கு நகர்த்த வேண்டும் என ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது சட்டசபையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்த நிலையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றது.
இந்த விவாதங்களில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உதயநிதி, ஆர்.காந்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் பேசினர். விதி எண் 110-இன் கீழ் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையமும் திருச்சியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையமும் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பேசிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து முதல்வரின் அறிவிப்புக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் இந்திரா காந்தி சிலையை சென்னையில் அமைக்க போகிறோம் என அறிவித்த முதல்வருக்கு நன்றி. இந்த அறிவிப்பு மூலம் தனது உள்ளம் பெரியது. யாருக்கும் தான் பகைவன் அல்ல. எல்லோருக்கும் நல்லது செய்யும் எண்ணத்தில் உள்ளேன் என்பதை முதல்வர் சொல்லாமல் சொல்லியுள்ளார்,
அதனால் அவருக்கு எனது நன்றிகள். ஓசூர் விமான நிலையத்தை பற்றி பேசிய போது பாமக எம்எல்ஏ அருள், சேலம் விமாந நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரினார். அது ஏற்றுக் கொள்ள கூடியதுதான். ஆனால் சேலம் விமான நிலையம் 6 மாதம் இயங்கும், மீண்டும் மூடிவிடுவார்கள்.
காரணம் அங்கு நிறைய பயணிகளே வருவதில்லை. என்னை பொருத்தவரை பயனுள்ள விமான நிலையமாக இருக்க வேண்டும் என்றால் அதை கொஞ்சம் நகர்த்தி ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் நடுவில் வைக்க வேண்டும் என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. முதல்வர் ஸ்டாலினும் சிரித்து விட்டார்.
மேலும் தனது பேச்சை தொடர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், இப்போது உள்ள விமான நிலையம் ஓமலூரில்தான் உள்ளது. சேலத்தில் இருந்து ஓமலூர் செல்லவே ஒரு மணி நேரம் ஆகும், ஆனால் விமான நிலையத்தை நகர்த்தி சங்ககிரியில் வைத்தால், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள பாதி பகுதி பயன் அடையும். குறிப்பாக ஈரோடு மக்களுக்கு சௌகரியமாக இருக்கும். இதை அருளும் ஒரு பரந்த எண்ணத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications