பெரியார் பேரன்.. சிவாஜி கணேசனால் எம்.எல்.ஏ ஆனவர்! யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 50 ஆண்டுகாலத்திற்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரியாரின் பேரன் (பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன்) சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவருக்கு பெயர் சூட்டியதே பேரறிஞர் அண்ணா.

முதல் முறையாக 1984ல் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அங்கு திமுக வேட்பாளரைவிட சுமார் இரு மடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
எம்ஜிஆரின் மரணத்தைத் தொடந்து, அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சரானார். அவரது தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க மறுத்தது. குறிப்பாக, பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி, ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தன.
அப்போது, ஜானகி ராமச்சந்திரன் அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களிக்க வேண்டுமென்று கோரினார் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்காத நிலையில், சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர்.
பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி கணேசன், அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அப்போது, தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
2004 லோசக்பா தேர்தலில் கோபிசெட்டிபாளையம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வென்றார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக இருந்தார். இதையடுத்து வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர், ஜவுளித்துறை இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
மீண்டும் 2009 மக்களவை தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும், 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பலமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளைப் பெற்றிருந்தபோதும், சட்டமன்றத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடாமல் இருந்து வந்தார்.
இந்தச் சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு அகால மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று இடைத்தேர்தலில் போட்டியிட்டார் ஈவிகேஸ் இளங்கோவன். 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எம்.எல்.ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தமது 76வது வயதில் மறைந்துள்ளார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications