இளங்கோவனுக்கு ஒரே ‘பிளஸ்’.. வரிசை கட்டும் சவால்கள்.. ‘40,000 யாருக்கு?’.. அலசும் அரசியல் விமர்சகர்!
திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி ஒன் இந்தியாவுடன் இணைந்து அலசுகிறார் கலை.
சென்னை : ஆளுங்கட்சி கூட்டணி என்பதைத் தவிர ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எந்த பெரிய பிளஸ்ஸும் இல்லை எனச் சொல்கிறார் அரசியல் விமர்சகர் கலை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பலம் - பலவீனம் - வாய்ப்புகள் - சவால்கள் என அனைத்தையும் அலசும் Swot Analysis இங்கே..
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமாகா வேட்பாளர் யுவராஜாவை வென்றார். தற்போது, இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பாக களமிறங்குகிறார்.
கடந்த தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகள் பெற்ற மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளது. ஆளுங்கட்சி என்ற கூடுதல் பலம் திமுக கூட்டணிக்கு உள்ளது. இவை தாண்டி என்னென்ன விஷயங்கள் இந்த இடைத்தேர்தலில் தாக்கம் செலுத்தப் போகின்றன என்பது பற்றி அரசியல் விமர்சகர் கலை ஒன் இந்தியா தமிழுடன் அலசுகிறார்.

பலம்
1. தமிழ்நாடு முழுக்க பரிச்சயமான மூத்த அரசியல்வாதியாக இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
2. திருமகன் ஈவெரா மரணமடைந்திருப்பதால் தொகுதி முழுக்க ஏற்பட்டிருக்கும் அனுதாப அலை.
3. ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சி என்பதால் இயல்பாகவே இருக்கும் சாதகமான சூழல்.
4. ஈரோடு மாநகராட்சியின் 33 வார்டுகளை உள்ளடக்கியது ஈரோடு கிழக்கு தொகுதி. அதில் 32 வார்டுகள் திமுக கூட்டணி வசம் இருக்கின்றன.

பலவீனங்கள்
1. ஈவிகேஎஸ் இளங்கோவனின் கடந்தகால செயல்பாடுகள், பேச்சுகள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்திருப்பது.
2. உட்கட்சிப் பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் பாராமுகமாக இருப்பது.
3. திமுக கூட்டணியில் சமீபகாலத்தில் வெளிப்பட்டிருக்கும் முரண்பாடுகள்.
4. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவை மாநகரப் பகுதிகளில் ஏற்படுத்தியிருக்கும் அதிருப்தி.

வாய்ப்புகள்
1. அதிமுக கூட்டணி சிதறியிருப்பதாக ஒரு தோற்றம் உருவாகியிருக்கும் நிலையில், திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற கருத்து.
2. ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் பெண்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்திருப்பது.
3. எதிர் கூட்டணியில் பாஜக இருப்பதால், சிறுபான்மையினர் வாக்குகள் சாதகமானதாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு.
4. திமுக கூட்டணியின் வாக்கு வங்கியாக கருதப்படும் மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிகமாக இருப்பது.
5. 2021 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்திருப்பது.

பிரச்சனைகள்
1. எளிதில் அணுக முடியாதவர் என்ற பிம்பம் இளங்கோவனுக்கு இருப்பது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
2. விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, திமுக கூட்டணி வேட்பாளருக்கு பின்னடைவாக இருக்கக்கூடும்.
3. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் தொடர் பிரச்சாரம்.
4. கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பலம் இல்லை என்ற தொடர்
விமர்சனம்.
இந்த விஷயங்கள் குறித்தும், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அலசுகிறார் அரசியல் விமர்சகர் கலை.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிளஸ்
ஈவிகேஎஸ் இளங்கோவன், பெரியாரின் வாரிசு என்பது பெரிய பிளஸ். ஈவிகேஎஸ் இளங்கோவன் நல்ல பேச்சாளர், சில நேரங்களில் எல்லை மீறிப் பேசுவதால் சிக்கலில் மாட்டிக்கொள்வார். தமிழ்நாட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரபலமான முகம். அவரைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. ஈவிகேஸ் இளங்கோவனின் இளைய மகனை இடைத்தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் முதலில் நினைத்தது. அரசியலுக்கு சம்பந்தமில்லாத நபரை திடீரென கொண்டு வந்து புகுத்த வேண்டாம், நன்கு அறிமுகமான முகம் என்ற அடிப்படையிலும், முதல்வர் ஸ்டாலினின் வற்புறுத்தலினாலும் இளங்கோவன் வேட்பாளராக்கப்பட்டார். 33ல் 32 வார்டுகள் திமுக கூட்டணி வசம் இருப்பது மிகவும் அனுகூலமான விஷயம். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் அந்தந்தப் பகுதி மக்களோடு நெருக்கமாக இருப்பார்கள்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மைனஸ்
காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு குறைவு தான். இளங்கோவனின் பேச்சுகளில் கட்சியினர் மத்தியிலேயே நல்ல அபிப்ராயம் இல்லை. காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியே ஒரு நாள் தான் பிரச்சாரத்திற்குப் போனார். அதுபோல பல காங்கிரஸ் தலைவர்கள் அங்கு செல்லவே இல்லை. திமுகவினர் தான் தீவிரமாக இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இயல்பாகவே பணக்காரக் குடும்பம் என்பதால் எளிதில் மக்களால் அணுகக்கூடியவர் அல்ல. ஈரோடு கிழக்கில் இப்போது அதிமுகவினர் பிரச்சாரம் செய்வதே, பாதி நாட்களில் இளங்கோவன் சென்னையில் தான் இருப்பார், இங்கு வரமாட்டார் என்பதுதான்.

மின் கட்டண உயர்வு - பெரிய பிரச்சனை
விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஏற்கனவே 250 யூனிட் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலான பயன்பாட்டுக்கு, வணிகப் பயன்பாடுகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். இதனால், மாதாமாதம் ஆயிரக்கணக்கில் பணம் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் முதலியார் சமூகத்தில் பெருவாரியானவர்கள் விசைத்தறி அல்லது கைத்தறி தொழிலாளர்கள். இது திமுக கூட்டணி வேட்பாளருக்கு பெரிய சேலஞ்ச். அதை திமுக உணர்ந்திருக்கிறது. அதனால், அவர்களை தாஜா செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்கான அறிவிப்புகளை அரசு சார்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

கூட்டணியில் சிக்கல்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மற்ற 38 வேட்பாளர்களும் வெற்றி பெற்றபோது இளங்கோவன் மட்டும் தேனியில் சுமார் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இப்போது சொந்த ஊரில் நின்றாலும் இளங்கோவன் சார்ந்த சமூகத்தினர் அங்கு பெரிதாக இல்லை. மேலும், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் களத்திற்கே வரவில்லை. கூட்டணி கட்சித் தொண்டர்களும் அங்கு ஆப்சென்ட்டாகி இருக்கிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரை, கூட்டணி கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைத்து விடுவார்கள். திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் யாரும் தொகுதியில் களமிறங்கி பிரச்சாரம் செய்ய முன்வரவில்லை.

இளங்கோவனுக்கு சவால்கள்
இலவச பேருந்து பயணம் திட்டத்தால் பெண்கள் மத்தியில் செல்வாக்கு கூடியிருப்பதாக சொல்லப்பட்டாலும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 தரவில்லை என்ற வருத்தம், எரிச்சல் இருக்கிறது. ஸ்கூட்டர் மானியம் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தியது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக ஒரு தலைவராக உருவெடுப்பதை பாஜக விரும்பவில்லை. பாஜக - அதிமுக கூட்டணி விலகலுடனே இருக்கிறது. அதனால், சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக அதிமுகவை விட்டு விலகிச் செல்லும் என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட அளவு சிறுபான்மையினர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுக்கு வாக்களித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் நிற்கும் இடத்தில் வாக்களிப்பார்கள், பாஜக நின்றால் வாக்களிக்க மாட்டார்கள்.

கமல் ஆதரவு வாக்குகள் - லாபம் இல்லை
கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரான இயக்கம் என்றுதான் கட்சி தொடங்கினார். இப்போது காங்கிரஸை கமல் ஆதரித்தால், அவருக்கு கடந்த முறை கிடைத்த 10 ஆயிரம் வாக்குகளும் அப்படியே டிரான்ஸ்ஃபர் ஆகாது. கமலுக்கு கிடைத்த வாக்குகள் கொஞ்சம் சீமானுக்கும், கொஞ்சம் அதிமுகவுக்கும் சொல்லக்கூடும். கமல்ஹாசனின் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்திருப்பதால், கமல் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்வதை விட அதிகமாக மற்றவர்களுக்கும் செல்லும் என்பதால், கமல் ஆதரவால் திமுக கூட்டணிக்கு பெரிய லாபம் இல்லை.

களத்தில் தாக்கம் - 40 ஆயிரம் வாக்குகள்
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான விஷயங்களான நீட் தேர்வு ரத்து விஷயத்தை ஒன்றும் செய்யவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்திவிட்டு, இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு கமுக்கமாக இருப்பது பெண்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதை பார்த்து வருகிறோம். ஆளுங்கட்சி பல்வேறு அத்துமீறல்களைச் செய்ய வாய்ப்பிருக்கிறது.
சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் தொகுதியில் இல்லை எனச் சொல்லப்படுகிறது. அவர்களின் வாக்குகளைச் செலுத்த திமுக முயற்சி செய்வதாக அதிமுக புகார் அளித்திருக்கிறது. போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தயார் செய்து அவர்களின் வாக்குகளைச் செலுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. மொத்தம் களத்தில் உள்ள 77 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவின் சுயேட்சை வேட்பாளர்கள் தான். பூத்தில் பிரச்சனை வரும்போது அங்கு நம் பலம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் சுயேட்சைகளை அதிகளவில் களமிறக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications