நடிகை சாவித்ரி முந்திட்டாங்க..ஆசை ஆசையா பெட்டியை திறந்தால்.. மலைத்த சரோஜாதேவி.. காரணம் அந்த "வள்ளல்"
சென்னை: கடைசிவரை என்னை தனது கட்சியில் சேரவேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னது இல்லை என்றும், பெற்ற தாயைவிட தன்னிடம் அன்பை பொழிந்தவர்" என்றும் கலங்கி சொன்னாராம் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.
தமிழ் சினிமாவில், தயாள குணம் படைத்த மனிதர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் எம்ஜிஆர்தான்... அந்த அளவிற்கு இவரது குணத்தை பற்றி, இன்று வரை மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளது.

அதிலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அரசியலுக்கும் அப்பாற்பட்டு, எம்ஜிஆரின் சிறப்பியல்புகளையும், வள்ளல் குணத்தையும், தமிழக மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பதற்காகவே, எத்தனையோ மன்றங்கள், இயக்கங்கள் எம்ஜிஆர் பெயரில் இன்றும் செயல்பட்டு வருகின்றன..
சரோஜாதேவி: அந்தவகையில், எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்புடையவரும், மூத்த பத்திரிகையாளரான, இதயக்கனி விஜயன், சிலதினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை சரோஜாதேவியை சந்தித்து பேசும்போது, எம்ஜிஆரின் நல்லியல்புகள் பற்றி சிலாகித்து சொல்லி உள்ளார். சரோஜாதேவி சொன்ன அத்தனை நிகழ்வுகளையும், ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக, நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார் இதயக்கனி விஜயன்.

நடிகர்கள்: "நடிகர்கள் எங்கே போனாலும் மக்கள் கூடி விடுகிறார்கள்... அதனால் கடைக்கோ அல்லது தெருவிலோ எளிதாக நடந்து போக முடியவில்லை.. இந்த விஷயத்தை எம்ஜிஆரிடம், சக கலைஞர்கள் நாங்கள் எல்லாரும், ஒருமுறை சொல்லி வருத்தப்பட்டோம்.. அதற்கு பிறகு அந்த விஷயத்தை நாங்களும் மறந்துவிட்டோம்.. ஆனால், இதை எம்ஜிஆர் மறக்கவில்லை.. மனதில்வைத்துகொண்டு, ஒரு நாள் முழுவதும் பல்வேறு கடைகளை கோல்டன் ஸ்டூடியோவிலேயே அமைத்தார்.
அதைப்பார்த்ததுமே நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோனோம்.. எங்களுக்கு சந்தோஷம் தாங்க முடியல.. உடனே நாங்கள் எல்லோரும் அங்கிருந்த கடைகள் ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றோம்... அதில் ஒரு நகைக்கடையும் இருந்தது.. அந்த கடைக்குள் நுழைந்து பார்த்தோம்.. நெக்லஸ் ஒன்று ரொம்ப அழகாக இருந்தது... பார்த்துமே ஆசையாயிடுச்சு.. அதனால், நான் வாங்க விரும்பினேன்.
நெக்லஸ்: ஆனால், அந்த கடைக்காரர், "இந்த நெக்லஸை சாவித்திரி அம்மாள் முதலிலேயே வாங்கிட்டாங்க.. இதுக்கான அட்வான்ஸ் தொகையையும் தந்துட்டு போயிருக்காங்க" என்றார்.. அதைக்கேட்டதுமே என் முகம் சுருங்கிவிட்டது.. என்னால அந்த நெக்லஸை வாங்க முடியலேன்னு ரொம்ப வருத்தமாவே இருந்தது..
ஷூட்டிங்: அதற்கு பிறகு, "தாயை காத்த தனயன்" படம் ஷூட்டிங் ஆரம்பமானது.. இந்தப் படத்தை தயாரித்தது தேவர் பிலிம்ஸ். ஆனால் அதை வாங்கி வெளியிட்டது எம்ஜிஆர் பிக்சர்ஸ்... அதன் வெற்றி விழாவும் நடத்தப்பட்டது.. அந்த விழாவில், எனக்கு முன்னால், மேடைக்கு சென்ற அசோகன், ஒரு சின்ன பெட்டியுடன் கீழே இறங்கி வந்தார்.. உடனே என் பெயரை மேடையில் அழைக்கவும், நான் மேடையில் ஏறி நின்றேன்.. எனக்கு ஒரு பெரிய பெட்டி தந்தார்கள்.. அதை வாங்கிக் கொண்டு, இறங்கி வந்தேன்.

கீழே வந்து உட்கார்ந்ததுமே, மெல்ல அந்த பெட்டியை திறந்து பார்த்தேன்.. என் கண்கள் பார்ப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை... எந்த நெக்லஸை வாங்க முடியவில்லை என்று வருத்தப்பட்டேனோ, அந்த நெக்லஸ் எனக்கு பரிசாக அந்த பெட்டிக்குள் இருந்தது.. மேடையில் அதைதான் எனக்கு பரிசாக தந்திருக்கிறார்கள்.. அந்த நிமிடம், நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
வாழவைக்கும் தெய்வம்: என்னைப் பொறுத்தவரையில் சொந்த தாயைவிட ஒருபடி மேலே சென்று அன்பை பொழிபவர் எம்ஜிஆர்.. அவர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட நான் அழைத்தால், உடனே என்னை தொடர்பு கொண்டு பேசும் அன்பாளர்... கடைசிவரை என்னை தனது கட்சியில் சேரவேண்டும் என்று அவர் சொன்னது இல்லை... எம்ஜிஆர் இன்று மட்டுமல்ல, என்றுமே என்னை வாழ வைக்கும் தெய்வம்" என்று கலங்கி சொன்னாராம் சரோஜாதேவி.












Click it and Unblock the Notifications