பாஜகவை எதிர்த்த அன்வர் ராஜாவா இது.. பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தப்பு என திடீர் கேள்வி
சென்னை: பாஜக உடன் யார்தான் கூட்டணி வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியைத் தவிர எல்லோருமே பாஜக உடன் கூட்டணி வைத்தவர்கள்தான் என்று அன்வர் ராஜா கூறியுள்ளார். அதிமுகவில் மீண்டும் இணைந்த பிறகு பேட்டி அளித்துள்ள அன்வர் ராஜா, பாஜகவிற்காக வாக்கு சேகரிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான அன்வர் ராஜா ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணா, எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்த நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனப் பேசியதால், விளக்கமே கேட்கப்படாமல் கடந்த 2021ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்த அன்வர் ராஜா. பிறகு சசிகலா சிறைக்குப் போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். இஸ்லாமியர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை அதிமுக ஆதரித்து வாக்களித்ததால் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார் அன்வர் ராஜா. அப்போது மாநிலங்களவையிலும் அன்வர்ராஜா அதை எதிர்த்து பேசினார். 2019 லோக்சபா தேர்தலில் அன்வர்ராஜா ஓரங்கட்டப்பட்டார். ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் அன்வர் ராஜா. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் கூறி வந்தார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதையடுத்து கட்சியில் அவரது பேச்சு எடுபடாத நிலையில், "தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சின்னம்மா வர வேண்டும்" என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் அன்வர் ராஜா. அவர் மீது ஏற்கனவே பல விவகாரங்களில் கட்சியின் இரட்டைத் தலைமை அதிருப்தியில் இருந்ததால் உடனடியாக நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் இணைந்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார் அன்வர் ராஜா.
அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, அதிமுக மாபெரும் இயக்கம். நான் முன்பே எம்ஜிஆர் மன்றத்தின் செயலாளர். எம்ஜிஆர் கட்சியை தொடங்கிய போது நான் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர், சிறுபான்மையினர் நல செயலாளர், புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் எனக்கு பல பதவிகளை கொடுத்துள்ளனர்.
அதிமுகவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக எம்ஜிஆர் நியமித்தார். அதிமுகவின் பல பொறுப்புகளில் பணியாற்றிய எனக்கு ஒரு சிறு சறுக்கல் ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது மீண்டும் இணைந்துள்ளேன் என்றார். கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என்றார். காங்கிரஸ் கட்சியைத் தவிர பாஜக உடன் அனைத்து கட்சிகளுமே கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று கூறிய அன்வர் ராஜா, திமுக கூட்டணியில் இருந்தது பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பதவி வகித்தது என்று கூறினார்.
பாஜக கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் கொள்கைகளில் முரண்பாடு ஏற்பட்டால் கூட்டணியை தயங்காது முறித்துக்கொள்வோம் இது ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த போது நடந்திருக்கிறது என்றும் அன்வர் ராஜா கூறியுள்ளார். பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இருப்பது பிரச்சினை இல்லை என்று சொன்ன அன்வர் ராஜா, லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக தாமரைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications