Exclusive அவதூறு.. வன்மம்! கருணாநிதியிடம் மொத்த ஊடகமும் பாவமன்னிப்பு கேட்டாங்க : டான் அசோக் பேட்டி!
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், கருணாநிதியின் அரசியல் பங்களிப்பு, தொலைநோக்குப் பார்வை பற்றி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் எழுத்தாளரும் திராவிட இயக்க செயற்பாட்டாளருமான டான் அசோக்.
டான் அசோக் பேசுகையில், "60களில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் உத்தர பிரதேசமும், தமிழ்நாடும் ஒன்றுதான். எல்லா மாநிலங்களும் ஒன்றுதான். இந்த 60 வருடங்களில் எப்படி மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வித்தியாசப்படுகிறது? யார் மூலம் இந்த வளர்ச்சி நடந்திருக்கிறது? எதனால் பாஜகவால் மதத்தை அரசியல் பொருளாக்கி வியாபாரம் செய்து வாக்குகளை பெற முடியவில்லை என்பதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கருணாநிதியின் பங்களிப்பு : இந்தியாவிற்கு கருணாநிதியின் பங்களிப்பு மிக அதிகம். மண்டல் கமிஷனில் கருணாநிதியின் பங்களிப்பு எவ்வளவு என்பதை வி.பி.சிங்கே பல மேடைகளில் பேசியுள்ளார். பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் அனுபவிக்கிறது. உ.பியில் இருக்கும் ஒரு பிற்படுத்தப்பட்ட நபரும் கருணாநிதியால் பயன்பெற்றுள்ளார்.
நரேந்திர மோடியும் கருணாநிதியால் பயன் பெற்றிருக்கிறார். முதல்வராக இருந்தபோது மோடி தேசியக் கொடி ஏற்றுவதற்கான உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் எல்லா பங்களிப்பையும் மறக்கடிப்பதற்காக அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசினர். இட ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கருதும் சொற்ப எண்ணிக்கையிலான பிரிவினர் வன்மம் கொண்டு கருணாநிதியை தூற்றினர்.
அவதூறுகள் : திருட்டு ரயிலில் மஞ்சப்பையுடன் வந்தார், விஞ்ஞான ஊழல் செய்தார், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றெல்லாம் இஷ்டத்திற்கு அடித்து விட்டனர். எல்லாமே பொய்கள். கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வசனகர்த்தாவாக பெரிய சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அப்புறம் தான் சென்னை வந்தார். சென்னை வரும்போதே பிரபலமான வசனகர்த்தாவாக இருந்தார். முதல் முறை எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கோபாலபுரத்தில் வீடு வாங்கிவிட்டார்.
சினிமாவும், கருணாநிதியின் பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்யும் வேலைகளில் ஈடுபட்டது. கருணாநிதியின் மறைவின்போது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஊடகங்களும் பாவமன்னிப்பு கேட்டன. அவரது திட்டங்கள், அரசியல் செயல்பாடுகள் எடுத்துச் சொல்லப்பட்டன. கருணாநிதியால் பலன் பெற்றவர்கள், இந்த திட்டங்களை எல்லாம் இவர்தான் செய்தாரா என உணர்ந்து கொண்டனர். இலவசமாக கல்வி கற்றதற்கு, நலத்திட்ட உதவிகளைப் பெற்றதற்கு பின்னால் இருந்த கருணாநிதியை உணர்ந்து கொண்டனர்.

நாட்டிற்கே முன்னோடி : கருணாநிதி மிகுந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். ஒரு கையெழுத்து போடுகிறார் என்றால் அந்த திட்டம் 20 - 30 வருடங்களுக்குப் பின்னால் எப்படி பயனளிக்கும் என யோசித்துச் செய்யக்கூடியவர் கருணாநிதி. 1970களில் பாடநூல் கழகத்தை உருவாக்கி, அதன் முதல் தலைவராக இருந்தவர் கருணாநிதி. அப்போது இந்தியாவிலேயே முதன்முறையாக கம்ப்யூட்டர் பற்றிய புத்தகம் வந்தது.
1980களில் செமிகண்டக்டர் பற்றிய புத்தகம் வந்தது. இன்று தமிழ்நாடு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கிறது என்றால், 1996-2001 காலகட்டத்தில் ஏற்பட்ட ஐ.டி புரட்சி. தகவல் தொழில்நுட்பக் கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலாக வகுத்தவர் கருணாநிதி. இதுபோல, எவ்வளவோ வழிகளில் முன்மாதிரியாகத் திகழ்பவர் கருணாநிதி.
இப்படி ஒரு தலைவர் : அரசியலில் தோற்றாலும், ஜெயித்தாலும், வெற்றி தோல்வியை சரிசமமாக கருதியவர் கருணாநிதி. எம்ஜிஆர் இருக்கும்போது திமுக ஆட்சிக்கு வரவே முடியவில்லை. ஆனால் அரசியலில் இருந்துகொண்டே இருந்தார். ஜெயித்தால் கோட்டையில் இருந்து ஆட்சி நடத்துவார், தோற்றால் அறிவாலயத்தில் இருந்து ஆட்சி நடத்துவார்.
கருணாநிதியின் அறிக்கைகள் எதிர்க்கட்சியின் அரசாணை. எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோதெல்லாம் ஆளுங்கட்சிக்கு அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருந்தார். இவர் போன்ற ஒரு அரசியல் தலைவர் வேறெங்கும் இருந்தாரா என்றால் இல்லவே இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications