சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்.. அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள்
சென்னை: ரயிலில் காலையில் சென்னையில் இருந்து கிளம்பி, கன்னியாகுமரி போய்விட்டு மாலையில் சென்னை திரும்புவது சாத்தியமா? என்று 20 வருடம் முன்பு யோசித்து இருந்தால் நிச்சயம் சாத்தியம இல்லை..கனவில் கூட நடக்காத விஷயம் என்று கூறியிருப்பார்கள். ஆனால் சாத்தியமாக்கி உள்ளது தெற்கு ரயில்வே.. நாகர்கோவில் வந்தே பாரத் தினசரி ரயிலாக மாறப்போகிறதா? என்தை பார்ப்போம்.
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இயங்க உள்ள நிலையில், இந்த ரயிலிலுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது.

பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டம் என்று சொல்லக்கூடாது. ஏனெனில் தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் அதுதான்.. சென்னை தான் தமிழகத்தின் கடைசி மாவட்டம்,(திருவள்ளுர் என்று சொன்னாலும் எதார்த்தமாக பார்த்தால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகள் சென்னையில் தான் உள்ளன).
தமிழ்நாட்டின் முதல் மாவட்டமான கன்னியாகுமரியில் கடலும், ஆறுகளும், குளங்களும், மலைகளும், அருவிகளும் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை வைத்து, மூன்று சூப்பர் மாவட்டங்களை வரிசைப்படுத்தினால், கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகியவற்றை சொல்லலாம். அந்த அளவிற்கு கன்னியாகுமரி அற்புதமான மாவட்டம். கேரளா உடன் பின்னிப்பிணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, இந்தியா முழுவதில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். பல்வேறு தொழில்களும் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சென்னையில் தான் குடும்பத்துடன் வசிக்கிறார்கள்.
இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வழியாகவும் சென்னைக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் போன்ற தினசரி ரெயில்களும், வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எத்தனை ரயில்கள் விட்டாலும் டிக்கெட் விற்றுத்தீர்ந்து விடுவதோடு, நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வரும் நிலைதான் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை உள்ளது.
இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு எத்தனை ரெயில்கள் இயக்கினாலும் அனைத்தும் நிரம்பி விடும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருந்து வருகிறது. அதிலும் பண்டிகை காலங்கள், விடுமுறை காலங்கள், விழாக்காலங்கள் போன்ற நாட்களில் சொல்லவே வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கன்னியமாகுமரி மாவட்ட மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து சென்னைக்கும், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி இருந் தினமும் செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் அல்லது நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரி வந்தார்கள்.
இந்த நிலையில் தான் சோதனை அடிப்படையில் வியாழக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறது. தற்போது ரயில்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை செல்ல 13 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் வெறும் 9 மணி நேரத்தில் சென்னை செல்ல முடியும்.
எப்படி என்றால், வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரிலிருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. அடுத்த 40 நிமிடங்களில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை இரவு 11.45 மணிக்கு செல்கிறது.
இந்த ரயிலில் 7 சேர்கார் பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் சேர் கார் பெட்டி என 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சென்னைக்கு அடுத்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்கிறது. வந்தே பாரத் ரயிலில் செல்ல நாகர்கோவில் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் வந்தே பாரத் ரெயிலில் முன்பதிவு செய்கிறார்கள்.
வந்தே பாரத் ரயிலில் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்கும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வருவதற்கு எக்சிகியூட்டிவ் கிளாஸ் பெட்டியில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ.3245-ம், சேர்கார் பெட்டிகளில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1605-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் 25-ந் தேதி வரை 4 வியாழக்கிழமைகளில் நாகர்கோவில்- சென்னைக்கும், சென்னை - நாகர்கோவிலுக்கும் இயக்கப்பட உள்ளது. வரவேற்புஅதிகமாக இருந்தால், தொடர்ந்து இயக்கப்பட்டு தினசரி வந்தே பாரத் விடப்படவும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications