வடிவேலு முதல் கோபி, சுதாகர் வரை.. விபூதி அடித்த ஹரீஷ்.. ஒற்றை வீடியோவால் சிக்கியது எப்படி?
வடிவேலு முதல் பரிதாபங்கள் கோபி, சுதாகர் வரை.. போலி டாக்டர் பட்டம் கொடுத்து விபூதி அடித்த ஹரிஷ் சிக்கியது எப்படி என்பதை பார்க்கலாம்.
சென்னை: ஒரு காலத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கியவர், திரைப்பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டிருக்கிறார் சிறந்த பேச்சாளர் புகழ் ஹரீஷ். அண்மையில் வெளியிட்ட வீடியோவை வைத்தே இவரின் ஐபி முகவரியை கண்டுபிடித்த போலீசார் ஆம்பூரில் போய் தூக்கி இருக்கிறார்கள் தனிப்படை போலீசார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கண்ணில் மண்ணைத்தூவி, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகத்தையே ஏமாற்றி நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகர் பார்த்திபன், யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் அத்தனை பிரபலங்களையும் போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஏமாற்றிய பலே கில்லாடி தான் ஹரீஷ்.
முதலில் இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த போது, உரிய அனுமதியுடனே டாக்டர் பட்டங்களை வழங்கியதாக வீடியோ வெளியிட்டார்.ஆனால் பிறகு செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதனிடையே தலைமறைவான ஹரீஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சென்னை கோட்டூர்புரம் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

நிராகரிப்பு
தன்னை போலீசார் தேடுவதை அறிந்த ஹரீஷ், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவில், பலதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கினேன். நான் வழங்கிய பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . என் மீது போலீசார் தொடர்ந்த இந்த மோசடி வழக்கில் போலீஸுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். எனக்குகு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதிரடியாக கைது
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதிகள், ஹரீஷின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனிடையே தனிப்படை போலீஸார் ஹரீஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் அருகே பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை கோட்டூர்புரம் தனிப்படை போலீஸார் நள்ளிரவு ஆம்பூருக்கு விரைந்து சென்று கைது செய்தனர்.

போலி டாக்டர் பட்டம்
இதனிடையே ஹரீஷ் எப்படி சிக்கினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரீஷ் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் திருமுல்லைவாயலில் வசித்து வந்திருக்கிறார். போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரம் விஸ்வருபம் எடுத்த நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் "பட்டம் வாங்கிய யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை. மத்திய அரசு பட்டம் கொடுக்க அனுமதி கொடுத்துள்ளது. இதை சட்டப்படி எதிர்கொள்வேன்" என கூறியிருந்தார்.

ஐபி முகவரி
ஒருபக்கம் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மறுபக்கம் போலீசார் அந்த வீடியோவின் SOURCE LINK-ஐ தேடி இருக்கிறார், ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டால் ஐபி முகவரியும் அந்த செல்போன் டவரும் தெரிந்துவிடும். இதைவைத்து போலீசார் ஹரீஷ் ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியிலுள்ள தன் கூட்டாளி குட்டி ராஜா என்பவரின் மாமியார் வீட்டில் ஹரீஷ் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்று ஹரீஸ் மற்றும் குட்டி ராஜா இருவரையும் கைதுசெய்து, இரவோடு இரவாக சென்னை அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரிடம் இருந்தும் இரண்டு லேப்டாப்கள், 1 ஐ-போன், 1 கம்ப்யூட்டர், போலி டாக்டர் பட்ட சான்றிதழ்கள், 96 பதக்கங்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்புகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளார்கள்.

சிறந்த பேச்சாளர்
யார் இந்த ஹரீஷ்? தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரீஷ். பல்லாவரத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பிடெக் படிப்பு படித்தவர். எந்த தலைப்பு கொடுத்தாலும் சிறப்பாக பேசி, தனது பேச்சுத்திறமையால் அனைவரையும் வசீகரிக்கும் திறமை உள்ளவர்.இவருக்கு தனியார் நிறுவனயம் ஒன்று சிறந்த பேச்சாளர் என்று பட்டம் வழங்கியது. பட்டத்தை வாங்கிய கையோடு புத்தி தடுமாறி இருக்கிறது. நாம் ஏன் இப்படி பட்டம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று யோசித்திருக்கிறார் ஹரிஷ். உடனடியாக சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பை முறைப்படி தொடங்கி, சென்னை எம்ஜிஆர் நகரில் அலுவலகத்தையும் தொடங்கி இருக்கிறார்.

இலவசமாக பட்டம்
தன்னை தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் மக்கள் தகவல் அலுவலர் என்று குட்டி ராஜா என்ற மகாராஜனிடம் அறிமுகம் செய்து அவர் மூலம் சினிமா பிரபலங்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். தான் நினைத்தபடி 2021ம் ஆண்டு கோயம்பேடு வளசரவாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைத்து கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். 2022ம் ஆண்டு இதேபோல் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியதாக கூறப்படுகிறது. சினிமா பிரபரலங்களுக்கு பட்டங்களை இலவசமாகவும், மற்றவர்களுக்கு ஒரு பட்டத்திற்கு ரூ.25 ஆயிரம் வரையிலும் வசூல் வேட்டையில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே தன் அமைப்பிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி இருப்பதாக கைப்பட ஆவணங்களை திருத்தியதாக கூறப்படுகிறது.செல்போன் செயலி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கையெழுத்தை அப்படியே போட்டு, விழா நடத்த அவர் பெயரில் அனுமதி கேட்டிருக்கிறார். இறுதியாக வள்ளிநாயகத்தையும் வெறும் பட்டம் வழங்கும் விழா என்று ஏமாற்றி அழைத்து அவர் கைப்படவே போலி டாக்டர் பட்டங்களை வழங்க வைத்திருக்கிறார். போலிடாக்டர் பட்ட விவகாரத்தால் தற்போது கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications