1+1 பிடிஆர் ஆடியோ.. "அவ்ளோ தூரத்துக்கு வந்துடுச்சா, திமுகவுக்கு நல்லதல்ல".. கஸ்தூரி சொல்றது புரியுதா?
சென்னை: நிதியமைச்சர் பிடிஆரின் ஆடியோக்கள் ஒவ்வொன்றாக, வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த கருத்துக்களும் இணையத்தில் வலம் வருகின்றன..
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இந்த ஆடியோ தான் பேசியது இல்லை என்று பிடிஆர் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று 2 வது ஆடியோவையும் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார்.
கர்நாடக தேர்தல் களத்தில் பிஸியாக இருந்தபோதும்கூட, தமிழக அரசியலில் ஒரு கண் வைத்தபடியே இருக்கிறார் அண்ணாமலை.. 'பிடிஆர் டேப்-2' என்ற தலைப்பில் இந்த ஆடியோவை ரிலீஸ் செய்திருக்கிறார். வழக்கம்போல ஆங்கிலம் மற்றும் தமிழ் சப்டைட்டிலுடன் இந்த குரல் பதிவும் வெளியாகி உள்ளது... இந்த ஆடியோ மொத்தம் 57 நொடி ஓடுகிறது..
மருமகன்: "எனக்கு பாஜகவிடம் பிடித்த விஷயமே, ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைதான். கட்சியையும் மக்களையும் பாத்துக்கொள்ளும் பொறுப்பு தனித்தனியே இருக்க வேண்டும். இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும்தான் எடுக்கிறார்கள்.. நிதி மேலாண்மை செய்வது எளிது. இதெல்லாம் ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்.. இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான்.. இப்போது நான் பதவியில் இருந்து விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்" என்றெல்லாம் அதில் பதிவாகியுள்ளது.
நீண்ட உரையாடல்: மிக நீண்ட உரையாடலில், மிக நுணுக்கமாக எடிட் செய்யப்பட்டிருக்கும் பகுதிகள் மட்டுமே, இந்த ஆடியோவில் துண்டுத்துண்டாக வெளியாகி வருகின்றன... இதன் தொடர்ச்சியாக இனிமேல் அடுத்தடுத்து வரும் என்றும் தெரிகிறது.. இந்த ஆடியோவை பொறுத்தவரை திமுக குடும்பத்துக்கு எதிராகவும், பாஜக தரப்புக்கு ஆதரவாகவும் நின்று பேசுவது போலவும் பதிவாகி உள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கான விளக்கத்தை திமுக தரப்பு இதுவரை தரவில்லை.. பிடிஆர் தந்த விளக்கமும் போதுமானதாக இல்லை என்று திமுக தரப்பே நினைக்கிறதாம்..

இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி சென்றுள்ளார்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் இன்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கிறார்.. ஏற்கனவே பிடிஆர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எடப்பாடி, "பிடிஆரின் இந்த ஆடியோவை கேட்டுட்டு சொல்லுங்கள்.. இதை புனையப்பட்டதா.. உண்மையானதா? இவரே பேசிவிட்டு.. இவரே பொய் என்று எப்படி சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பிய நிலையில், டெல்லிவரை இதை கொண்டு செல்ல போகிறாரா? என்ற கேள்வியும் கிளம்பி உள்ளது.
காயத்ரி ரகுராம்: இதனிடையே காயத்ரி ரகுராம் இந்த ஆடியோ விவகாரம் பற்றி சொல்லும்போது, "இந்த ஆடியோவை பெற நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தினீர்கள்? இதை பதிவு செய்ய நீங்கள் யாரை விதைத்தீர்கள்? நிச்சயமாக அதிக பணம். இந்த அண்ணாமலை தேசிய அரசியலில் இருந்தும், மாநில அரசியலில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும்.. பாத்ரூமில் கேமரா வச்சா என்ன நாறுமோ அதான் அண்ணாமலை செய்வது. அநாகரீகத்தின் உச்சம் அண்ணாமலை செய்யும் வீடியோ ஆடியோ அரசியல்." என்று வழக்கம்போல் அண்ணாமலை மீது பாய்ந்துள்ளார்.

நடிகை கஸ்தூரி: அந்தவகையில், சமூக ஆர்வலரும், நடிகையுமான கஸ்தூரியும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. ''ஒரு முழு உரையாடலையும் உருவாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதா? சரிபார்க்காமல் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி அதைப் பகிர்வாரா? இது அமைச்சர் பிடிஆருக்கோ அல்லது திமுகவுக்கோ நல்லதல்ல'' என்று கூறியுள்ளார்..
திமுக என்றில்லை, யாராக இருந்தாலும் சரி, அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால், முகத்துக்கு நேரே துணிந்து கேட்டுவிடுவார் கஸ்தூரி.. யாருக்காகவும், எதற்காகவும், எப்போதும் பயந்தது கிடையாது. இதனால் தனக்கு வரும் விமர்சனங்களையும், தடித்த வார்த்தைகளையும்கூட, புறக்கணிக்காமல் தொடர்ந்து எதிர்கொண்டு வருபவர்.. இப்படிப்பட்ட சூழலில், கஸ்தூரியின் ட்வீட் பலரது கவனத்தையும் திருப்பி உள்ளது..
முக்கியத்துவம்: அதாவது, பிடிஆர் அந்த ஆடியோவில் பேசியிருப்பது உண்மை என்றால், திமுகவுக்கு நிச்சயம் பிரச்சினை வரும்.. அல்லது, திமுகவை பற்றி உண்மைக்கு புறம்பாக அமைச்சர் பிடிஆர் பேசியிருந்தால், பிரச்சினை இவருக்குத்தான் என்று பொருள்படும்படி கஸ்தூரியின் இந்த பதிவு உள்ளது.. யாருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் இல்லாமல், நடுநிலையோடு கஸ்தூரி பதிவிட்டுள்ள இந்த ட்வீட், மிகுந்த முக்கியத்துவத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது..!!

பிடிஆர் விளக்கம்: இதனிடையே, 2வது ஆடியோவுக்கும் மறுப்பு கூறி விளக்கம் தந்துள்ளார். அதில், பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்... திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்? நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு. சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன என்றெல்லாம் மிக நீண்ட விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications