தமிழ்நாட்டில் வளரும் பாஜக? இது யார் பாருங்க.. பிஜேபியை சுற்றி பின்னப்படுதா வலை? அதிமுக மாஸ்
சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிஸியில் இறங்கியுள்ள நிலையில், அதிமுக என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை குறைந்தபட்சம் 15 சீட்டுக்களையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.. அந்தவகையில், பேச்சுவார்த்தையையும் துவங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், பாஜக காய்களையும் நகர்த்தி வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்களில் காலூன்ற வேண்டி, கடந்த 2 வருடங்களாகவே தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இதன்காரணமாக, மூத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் போன்றோரை தன்னுடைய ஆதரவில் வலுவாகவே வைத்து வருகிறது.. மற்றொருபுறம் சசிகலாவுக்கான அரசியல் வேகத்தையும் அதிகரிக்க செய்துள்ளது.
அமமுக: இதில், தங்களுக்கு சாதகமாக உள்ள 22 தொகுதிகளை பாஜகவிடம் லிஸ்ட் போட்டு தினகரன் தந்திருப்பதாக தெரிகிறது. இந்த முறை தேர்தலில் தினகரன் போட்டியிட போவதில்லை என்றாலும், தன்னுடைய ஆதரவாளர்களை களம் சில தொகுதிகளை கேட்டுள்ளாராம். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு 3 சீட், தினகரனுக்கு 2 சீட் தர பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
அதேபோல, வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்துவிட்டதாக தெரிகிறது.. வேலூரை வென்றாக வேண்டும் என்று ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறாராம்.. இதில் கூட்டணியில் இணைய, தேமுதிகவும் விருப்ப பட்டியலை தந்துள்ளது.. பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது. ஆக, கூட்டணி அமைப்பதில் பாஜகவின் வேகம் அதிகரித்தவாறே வருகிறது.
பேச்சுவார்த்தை: ஆனால், அதிமுகவில் இந்த அளவுக்கு இன்னும் வேகம் எடுக்கவில்லை.. பேச்சுவார்த்தைகள் நாலாபக்கமும் நடந்து வருகிறதாம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த பாமக, எம்பி தங்கள் அணிக்கு வரும் என்று அதிமுக நம்பியது.. காரணம், எம்பி தேர்தலில் பாமகவின் ஓட்டுக்களால்தான், அதிமுக பெருவாரியான இடங்களை வெற்றி பெற முடிந்தது..
ஆனால், தங்களுக்கு ஓட்டுக்கள் எதிர்பார்த்த அளவுக்கு விழவில்லையே என்ற ஆதங்கம் பாமகவுக்கு இருக்கிறது.. அதனால்தான் இந்த முறை, அதிமுக தவிர்த்தே கூட்டணி முடிவை யோசித்து வருகிறதாம். எனினும், பாமகவுக்கு இருக்கும் 6 சதவீத ஓட்டுக்களை அதிமுக பக்கம் கொண்டுவரும் முயற்சியிலும் எடப்பாடி டீம் இறங்கி உள்ளதாம். ஜிகே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் அதிமுக கூட்டணியிலேயே ஐக்கியமாக வாய்ப்புள்ளது என்றாலும், அது உறுதியாக அறிவிக்கவில்லை.
அதிமுக வியூகம்: எனினும் அதிமுகவில் கூட்டணி முடிவாகவில்லையே தவிர, பாஜகவுக்கு எதிரான வியூகத்தையும் கையில் எடுத்துள்ளதாம்.. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்குவில்தான், ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுக மண்ணை கவ்வியது.. இந்த தேர்தலின்போதுதான், பாஜகவுடன் உரசல் அதிகமானது.. சிறுபான்மையினர் ஓட்டுக்களும் இங்கு போதுமான அளவுக்கு கை கொடுக்கவில்லை..
எனவே, பாஜகவுக்கு பதிலடி தருவதுடன், கொங்குவில் தன்னுடைய பலத்தை மீண்டும் பெற்றாக வேண்டும் என்று அதிமுக முடிவு செய்துள்ளதாம். அந்தவகையில், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் எப்படியும் பாஜக போட்டியிடக்கூடும் என்பதால், இந்த தொகுதிகளிலெல்லாம் அதிமுகவின் குறி விழுந்துள்ளதாம்..
அதுமட்டுமல்ல, மாநில தலைமைக்கு அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு, பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது என்பதையும் நிரூபிக்க போகிறதாம். இதற்கு காரணம், திமுகவை வலுவாக எதிர்ப்பதன்மூலம், தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று, செல்லுமிடமெல்லாம் அண்ணாமலை மார்தட்டி வருவது, அதிமுக தரப்புக்கு எரிச்சலையே தந்து வருவதால், இப்படி ஒரு வியூகத்தை முன்னெடுக்க போவதாக சொல்கிறார்கள்.
அதேபோல, அதிமுகவின் வாக்கு சதவீதம் எந்தவிதத்திலும் கொங்குவில் பாதிக்கப்படவில்லை என்பதையும் தமிழக மக்களுக்கு நிரூபிக்கவே, இந்த இரட்டிப்பு வியூகத்தை அதிமுக கையில் எடுத்துள்ளதாம்.
எனவேதான், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற அதிமுக வேட்பாளர், "பசையுள்ள" வேட்பாளர்களையும் நிறுத்தவும் யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.
என்ன முடிவு: அதேபோல, தென்மண்டலங்களிலும், தேவேந்திர குல வேளாளர், நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறும் முயற்சியில் எடப்பாடி தரப்பு இறங்கியிருப்பதாக தெரிகிறது..
இந்த 2 சமூகத்தை சேர்ந்தோருக்கு, கட்சிக்குள் முக்கிய பதவிகளை ஒதுக்க போவதாகவும், நாடார், தேவேந்திர குல வேளாளர் சமூத்தை சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்க போவதாகவும் செய்திகள் பரபரத்ததையும் இங்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
ஆனால், இந்த 2 சமூக ஓட்டுக்களின் ஆதரவு பாஜகவுக்கும் அதிகமாகவே இருக்கிறதாம்.. இது தொடர்பான டேட்டா ஒன்றையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் கையில் வைத்திருக்கிறாராம்.. எனவே, 2 சமூக ஓட்டுக்களும் அதிமுக பக்கம் திரும்புமா? என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.. மொத்தத்தில், கூட்டணி தாமதமானாலும், குறி என்னவோ அழுத்தமாகவே அரசியல் களத்தில் அதிமுகவுக்கு விழுந்துள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications