எங்க ஸ்டாலினே சொல்லிட்டாரு.. திருச்சி சிவா "உப்புமா" சொன்னதுமே.. அதிர்ந்த பாஜக.. குறுக்கே சூர்யா வேற
திருச்சி சூர்யா ட்வீட் பதிவிட்டு, திருச்சி சிவாவின் உப்புமா கதையை கிண்டலடித்துள்ளார்
சென்னை: திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் உப்புமா கதை ஒன்றை சொல்லி உள்ளார்.. பாஜகவை கிண்டல் செய்து இந்த கதையை சொன்னாலும், உப்புமா கதையை கேட்டு பாஜகவினரே அடக்க முடியாமல் சிரித்துள்ளார்கள்.. ஆனால், திருச்சி சிவா பேசியது பொறுக்கமுடியாமல், திருச்சி சூர்யா கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றிய மோசடிகளை வெளியிட்டதில் இருந்தே, தேசிய அரசியல் தகிக்க தொடங்கி உள்ளது.. எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்விகளை எழுப்ப, பாஜகவோ பதிலளிக்க முடியாமல் திணறி வருவதாக தெரிகிறது.
அந்தவகையில், நேற்றுகூட, அதானி மீதான புகார்கள் அவையில் வெடித்து கிளம்பின.. அதானி பங்கு சரிவு மற்றும் ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று முழக்கங்களும் எழுப்பப்பட்டன..

ஹாஸ்டல் சாப்பாடு
அப்போது, ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு பிறகு, திமுக எம்பி திருச்சி சிவா உப்புமா கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார்.. அதாவது, ஒரு காலேஜில் உள்ள ஹாஸ்டலில் தினமும் உப்புமா போடுகிறார்கள். உப்புமா பார்த்ததும் அந்த மாணவர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள்.. உப்புமா பிடிக்காத மாணவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, "உப்புமா வேண்டாம்" என்று போராடுகிறார்கள். ஹாஸ்டல் வார்டனிடமும் எங்களுக்கு தினமும் உப்புமா வேண்டாம் என்று முறையிடுகிறார்கள்..

பூரி ஆம்லெட்
உடனே வார்டன்.. "சரி ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம்... நான் ஒரு லிஸ்ட் போடுகிறேன். அந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்தமான உணவுக்கு ஓட்டு போடுங்க.. அதில் வெற்றிபெறும் பொருளை தேர்வு செய்யலாம். அந்த உணவை ஹாஸ்டலில் கொடுக்க சொல்கிறேன்" என்கிறார்.. இதையடுத்து வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த வாக்கெடுப்பில், 7 சதவிகிதம் மாணவர்கள் பிரெட் ஆம்லெட் வழங்க வாக்களிக்கிறார்கள். 13 சதவிகிதம் பூரி வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள்.

உப்புமா வெற்றி
18 சதவிகிதம் மாணவர்கள் உருளைக்கிழங்கு பரோட்டா வழங்க கோரிக்கை வைக்கிறார்கள். 19 சதவிகிதம் மாணவர்கள் மசாலா தோசை வேண்டும் என்கிறார்கள்.. 20 சதவிகிதம் மாணவர்கள் இட்லி வேண்டும் என்று கேட்கிறார்கள். 23 சதவிகிதம் பேர் உப்புமா வேண்டும் என்று கேட்கிறார்கள். இதில் 23% பேர் உப்புமா வேண்டும் என்பவர்களே அதிகம் என்பதால் மறுபடியும் உப்புமாவே ஜெயித்துவிடுகிறது. அதனால், மீண்டும் உப்புமாவை போடலாம் என்று முடிவு எடுக்கிறார்கள்..

கை கோர்ப்பு
இந்த உப்புமா வென்றது போலத்தான் 2019-ல் பாஜகவும் வென்றது. மாணவர்கள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் உப்புமா வென்றது போல எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் பாஜக வென்றது... அது அடுத்த தேர்தலில் நடக்காது. எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்று எங்கள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார்.. எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்று எங்கள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். அது நடக்க வேண்டும். அப்போதுதான் பாஜக வெல்வதை தடுக்க முடியும். நாங்கள் கை கோர்த்து வருகிறோம்.

குழி தோண்டியாச்சு
இந்த ஆட்சி மூலம் நடந்தது எல்லாம் போதும். மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும். மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது போதும். சமூக நீதிக்கு எதிரான இந்த ஆட்சியின் நடவடிக்கைகள் போதும். மத உரிமைகளுக்கு எதிரான இந்த ஆட்சி நடந்தது போதும். தமிழுக்கு எதுவும் செய்யாமல் இவர்கள் இல்லாத சமஸ்கிருதம் மொழிக்காக உழைக்கிறார்கள். அதற்கு பணம் கொடுக்கிறார்கள். மாநில உரிமைகளை இவர்கள் முற்றாக குழி தோண்டி புதைத்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்சி போதும். இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது. இதோடு இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து முடிவு கட்டும் என்று சொல்லி உப்புமா கதையை முடித்தார் திருச்சி சிவா.

உப்புமா கதை
இந்த கதையை கேட்டதும், பாஜக உறுப்பினர்கள் டென்ஷன் ஆனாலும், பிறகு அவர்களையும் மீறி சிரித்துவிட்டார்கள்.. சபாநாயகர் தன்கர் உள்பட ராஜ்ய சபா உறுப்பினர்கள் மொத்த பேரும் சிரித்து விட்டார்கள்.. ஆனால், திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா இதை கிண்டல் செய்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "உப்புமா கதை நல்லாதான் இருந்தது.. பிரெட் & ஆம்லெட் - வெஜிடேரியன்கள் தவிர்த்து விடுவார்கள்.. பூரி - எண்ணெய் பதார்த்தம்.. ஆளு பரோட்டா - மைதா மற்றும் கொழுப்பு நிறைந்தது.. மசாலா தோசை & இட்லி - கார்போஹைட்ரேட்.. அதனால்தான் மாணவர்கள் தவிர்த்திருப்பார்கள்.

பெஸ்ட் உப்புமா
மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் உப்புமா மிகவும் ஆரோக்கியமானது என்றும் மாணவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.. அதனால், பெஸ்ட் உணவு உப்புமா தான்... இந்த விஷயத்தில் இப்போது எந்தவித எதிர்ப்பும் ஏற்படவில்லை. மறுபடியும் உப்புமாவே வெல்லும். உப்புமாதான் என்றைக்குமே" என்று பதிவிட்டுள்ளார்.. அதாவது பாஜகவை எதிர்க்க இப்போது யாருமில்லை. அடுத்து வரும் தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும், எப்போதுமே எப்போதும் ஆட்சியில் இருக்கும் என்ற ரீதியில் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்... இந்த உப்புமா ட்வீட்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications