தமிழ்நாடு பேருந்துகளில் கட்டண சலுகை.. "டிக்கெட்" வாங்குவது எப்படி? வந்தது புதிய வழிமுறை!
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் வாயிலாக பயனாளிகள் பெற்றிடும் வகையில் முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். இதன் மூலம் மக்கள் எளிதாக கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டு பெற முடியும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஏற்கனவே அமலில் இருந்த பச்சை நிற எஸ்இடிசி பேருந்துகள் புனரமைக்கப்பட்டு மஞ்சள் நிற பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்தான், பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் வாயிலாக பெறும் வசதியை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக , முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டர்லின் ஆணையின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் (Internet) வாயிலாக விண்ணப்பித்து, பயனாளிகள் பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள்.
அவ்வறிவிப்பினை தொடர்ந்து, இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (PTCS) மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இன்று (07.09.2023) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில். ஆண்டுதோறும் 3.237 கண் பார்வை குறையுடையோர்கள், 1,468 மாற்றுத்திறனாளிகள், 1,180 அறிவுசார் குறைபாடுடையோர்கள், 117 சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு உரிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் (சென்னை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்), தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர் ஆகிய அலுவலர்களின் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வாயிலாக உரிய அலுவலகம் வந்து செல்லாமல், வீட்டின் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற வலைதளம் வாயிலாக விண்ணப்பித்து அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளவும், உரிய குறுஞ்செய்தி பெறப்பட்ட பின்பு பயண அட்டையை A4 Sheet (white / colour) / பிளாஸ்டிக் அட்டையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் (பொ) திரு. க.குணசேகரன், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (P.T.C.S.) மேலாண் இயக்குநர் திரு. மூ.அ.முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications