"திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை மாத்திட்டாங்களே..” முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!
சென்னை: "திமுகவின் பிரசார பீரங்கியாக இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிட்டார்கள்" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் ஆளுநர் ரவியை சந்தித்து பிரியாவிடை கொடுத்த கையோடு மதுரை சென்ற ஸ்டாலின், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநரை கிண்டல் செய்துள்ளார்.
மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், "2021 தேர்தலில் இருந்தததை விட நாம் இப்போது கூடுதலாக பலம் பெற்றுள்ளோம். அதனால் தான் வெல்வோம் 200 என்று என்னால் தைரியமாக சொல்ல முடிகிறது. நான் உறுதியாக சொல்கிறேன், திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.

திமுக தான் வெற்றி பெறபோகிறது என்று பாஜவே நினைக்கிறது.
அதனால் தான் நமது பிரசார பீரங்கியாக இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றி இருக்கிறது. ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்ற விரக்தியில் அவர் கிளம்பிவிட்டார்.
மத்திய பாஜக அரசை கேட்கிறேன். தேர்தல் முடியும் வரை ஆளுநர் ரவியை மாற்றாதீர்கள் என்று எத்தனை முறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எத்தனை முறை கோரிக்கை வைத்துள்ளேன். இதில் கூட எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டீர்களா?" எனக் கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார் ஸ்டாலின்.
தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு தருணங்களில் முரண்பாடுகள் நிலவி வந்தன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற காரணத்தை எழுப்பி, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்தன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கேரள ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின், லோக் பவன் சென்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்தார்.
இதையடுத்து, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் ரவி மாற்றப்பட்டு இருப்பதை கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார். நீண்டகாலமாகவே, ஆளுநர் ரவி திமுக வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என ஸ்டாலின் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications