தடுப்பூசி போட்டா என் கால்நடைகளை நீ மேய்ப்பாயா?... கேட்ட விவசாயி....அடுத்த நொடி ஷாக் கொடுத்த அதிகாரி
சென்னை: தடுப்பூசி போட்டுக் கொள்ள சொன்ன சுகாதாரத் துறை அதிகாரியிடம் நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன், என் ஆடு மாடுகளை நீங்கள் மேய்த்து வருவீர்களா என விவசாயி ஒருவர் கேட்டதும் அதற்கென்ன நான் ஆடு மேய்க்கிறேன் என அந்த அதிகாரி கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே கொரோனாவின் இரு அலைகள் வந்துவிட்ட நிலையில் மூன்றாவது அலை இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ வரலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இந்த 3-ஆவது அலை கொரோனா தடுப்பூசி போடாதவர்களையே தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் சுகாதார துறை அலுவலர்கள் நேரில் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசிகளை போட்டுக் கொள்கிறார்கள்.

சுகாதாரத் துறை
அது போல் தொலைதூர கிராமங்களிலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் வெயில், மழை, வெள்ளப்பெருக்கு, கடினமான மலை பகுதிகள் உள்ளிட்ட கடும் சிரமங்களை சந்திக்கிறார்கள். எத்தனை சிரமங்களை சந்தித்தாலும் இவர்களது ஒரே குறிக்கோள் மக்களை எப்படியாவது தடுப்பூசி போட வைப்பதுதான்.

ஊர் மக்கள்
இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது இவர்கள் அந்த ஊர் மக்களால் தாக்கப்படும் சம்பவங்களும் நடக்கும். அது போல் சிலர் குழந்தை போல் சில விஷயங்களுக்கு அடம் பிடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு கிராமத்தில் சுகாதாரத் துறை அதிகாரி சந்தித்த முக்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.

விவசாயியின் ஸ்லாங்
அந்த வைரல் வீடியோவில் பேசும் விவசாயியின் ஸ்லாங்கை பார்த்தால் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயியை போல் தெரிகிறது. அவர் கையில் ஆடு, மாடுகளுடன் மேய்ச்சலுக்காக செல்கிறார். அப்போது அங்கு வரும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரிடம் தடுப்பூசி போட்டுவிட்டீர்களா என கேட்கிறார்கள்.

கொரோனா
இல்லை என்கிறார். தடுப்பூசி போட்டால்தான் கொரோனா வராது. பாதுகாப்பாக இருக்கலாம் என அதிகாரி தெரிவிக்கிறார். அதற்கு அந்த விவசாயி, தடுப்பூசி போட்டால் கை, கால் வலிக்கும் காய்ச்சல் வரும்னு சொல்றாங்க, அப்படி வந்தால் என் ஆடு, மாடுகளை நீங்கள் மேய்க்கிறீங்களா என கேட்கிறார்.

ஆடு, மாடு
அதற்கு அந்த அதிகாரி, அதெல்லாம் ஒன்றும் வராது. சரி, ஒரு நாள் நான் ஆடு, மாடுகளை உங்களுக்கு பதிலாக மேய்த்தால், நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பினார் அந்த சுகாதார அதிகாரி. இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எப்படியாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரத் துறை அதிகாரியின் செயல்பாட்டை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications