பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15 உயர்கிறதா? வாகன ஓட்டிகளிடையே பீதி!
சென்னை: எரிபொருள் விலை திடீரென உயரக்கூடும் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயரக்கூடும் என்றும், டீசல் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரிக்கலாம் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களிலும் வாகன ஓட்டிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போரால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியிலும் மேற்காசிய போரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களும் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மாதம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் கடந்த சில நாட்களாகவே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சுமார் 15 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தரப்பிலும் பேச்சு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக எரிபொருள் சிக்கனத்தின் அவசியம் பற்றி பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார். எரிபொருளை மிச்சப்படுத்தும் வகையில் தனது கன்வாய் வாகனங்களின் எண்ணிக்கையையும் பிரதமர் மோடி குறைத்துள்ளார். டெல்லி உள்பட பாஜக ஆளும் மாநிலங்களிலும் எரிபொருள் சிக்கன நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.
வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம்
எரிபொருள் விலை திடீரென உயரக்கூடும் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் பதற்றத்துடன் அதிக அளவில் எரிபொருள் வாங்க தொடங்கினர். இதனால் நீண்ட வரிசைகள் பெட்ரோல் நிலையங்களில் காணப்படுகின்றன. சில நிலையங்களில் "எரிபொருள் இல்லை" என்ற பலகைகளும் வைக்கப்பட்டன.
மே 15 ஆம் தேதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயரக்கூடும் என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்பட்டதையடுத்து, பல இடங்களில் வாகன ஓட்டிகள் டேங்க் புல் செய்து செல்வதையும் பார்க்க முடிகிறது. டெல்லியில் எரிபொருள் விலை உயர்வு குறித்து மக்கள் மத்தியில் கலவையான கருத்துகள் நிலவின. "நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டியது முக்கியம். தேசிய நலனுக்காக என்றால் எரிபொருள் விலை ஓரளவு உயர்வை ஏற்றுக்கொள்ளலாம்" என்று நீரஜ் ஜெயின் என்ற வாகன ஓட்டி தெரிவித்தார்.
அதே சமயம், மற்றொரு பயணி, "ஏற்கனவே பணவீக்கம் கடுமையாக உள்ளது. சம்பளம் உயரவில்லை. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை ஏற்க முடியாது" என்று கூறினார். ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில், பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராக இல்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர். பல கிராமப்புற பெட்ரோல் நிலையங்களில் ஏற்கனவே "பெட்ரோல் இல்லை", "டீசல் இல்லை" என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.15 உயர்கிறது?
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயரக்கூடும் என்றும், டீசல் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரிக்கலாம் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களிலும் வாகன ஓட்டிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
எனினும், புவனேஸ்வரில் எரிபொருள் விலை உயர்வு குறித்த தகவல்களை பெட்ரோல் நிலைய மேலாளர் ஒருவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், விலை உயர்வு தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே இத்தகைய தகவல்களை நம்ப முடியும் என்று கூறினார். அதே நேரத்தில், எரிபொருள் விலை உயர்ந்தால் அது பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் என்றும் பலர் கவலை தெரிவித்தனர்.














Click it and Unblock the Notifications