சர்ச்சையான சவுக்கு சங்கர் பேட்டி.. சிறையிலிருந்து வெளிவந்த பெலிக்ஸ் ஜெரால்டு.. உடனே செய்த காரியம்
சென்னை: பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கரின், பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த சில நாட்களுக்கு முன் கைதான நிலையில், நேற்று ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் சிறையில் இருந்த போது தனக்கு ஆதரவாக பேசிய சீமானை, சிறையில் இருந்து வெளியான உடனே நேரில் சந்தித்து பேசினார்.
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
இதற்கிடையே சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து அவர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசும் வகையில் கேள்வி கேட்டதாக பெலிக்ஸ் ஜெரால்டு மீது குற்றம் சாட்டப்பட்டது . இதையடுத்து பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது நீதிபதி குமரேஷ் பாபு கடுமையான கண்டனங்களை கூறியிருந்தார்.
மேலும் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும். நேர்காணல் தர வருபவர்களை அவதூறு கருத்துக்களை கூற தூண்டும் விதமாக பேட்டி எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் முன் ஜாமின் மனு நிலுவையில் இருக்கும் போது பெலிக்ஸ் ஜெரால்டு தலைமறைவானார். அவர் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நொய்டா பகுதியில் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்
தொடர்ந்து டெல்லியில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை சென்னை அழைத்து வந்த போலீசார் திருச்சி அழைத்துச் சென்றனர். அங்கு மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை மற்றும் வாக்குமூலத்தை பெற்றனர் அதனை தொடர்ந்து திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஜெரால்டு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா ஃபெலிக்சை மே 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பெலிக்ஸ் ஜெரால்ட் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10:30 மணிக்குக் கோயம்புத்தூர் டவுண் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருந்து வெளி வந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து பேசினார்.
பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும், நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அறிக்கை மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் கேள்வி எழுப்பி வந்தார். குறிப்பாக பெலிக்ஸ் கைதுக்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவித்ததும் சீமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் சீமானை அவர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.












Click it and Unblock the Notifications