சென்னா ரெட்டி தெரியுமா? அடுத்த லெவலை அடைந்த ரவி - ஸ்டாலின் மோதல்! "அந்த" பார்முலாவை இறக்கிய முதல்வர்
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது. அறிக்கைகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் நிகழ்ந்து வந்த மோதல் தற்போது வெளிப்படையாக சட்டசபையிலேயே வெடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை இன்று கூடும் முன்பே பரபரப்பான சூழ்நிலைதான் நிலவி வந்தது. தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சை நிலவி வந்ததால் ஆளுநர் ஆர். என் ரவி சட்டசபையில் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இருக்கை தொடர்பான பிரச்சனையும் கவனம் பெற்றது.
எடப்பாடியும் - ஓ பன்னீர்செல்வமும் இன்று அருகருகே அமர வைக்கப்பட்ட நிலையிலும் அந்த பிரச்சனை பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவியின் உரை இன்று சட்டசபை எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.

மிகப்பெரிய பிரச்சனை
இன்று சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவியின் உரை சர்ச்சையாக 3 காரணங்கள் உள்ளன.
1- தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் ஆளுநர் அதை படிக்காமல் தானாக சில வார்த்தைகளை சேர்த்து, சில வார்த்தைகளை நீக்கி உள்ளார்.
2 - ஆளுநர் ஆர். என் ரவி தொடக்கத்தில் மட்டும் தமிழ்நாடு என்று கூறிவிட்டு கடைசி கட்டங்களில் தமிழ்நாடு என்று சொல்லாமல் இந்த அரசு என்று கூறியுள்ளார்.
3- ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.

வெளியே எதிர்த்து இருக்கலாம்
ஆளுநர் ஆர். என் ரவி இதற்கு ஆளும் தரப்பிடம் இருந்து எதிர்வினையை கண்டிப்பாக எதிர்பார்த்து இருப்பார். எப்படியும் திமுக தரப்பில் இருந்து எதிர்வினை வரும் என்று தெரியும். ஆனால் சட்டசபையிலேயே இந்த எதிர்வினை வரும் என்று அவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். பாஜக, அதிமுகவினரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் சட்டசபைக்கு வெளியில் பேட்டி கொடுத்து இருக்கலாம், கண்டன அறிக்கை விட்டு இருக்கலாம். ஆனால் ஸ்டாலின் அதே இடத்திலேயே ஆளுநரை எதிர்த்தார். ஆளுநருக்கு முன்பாகவே அவரின் பேச்சை நிராகரித்து உடனே தீர்மானம் நிறைவேற்றி, அதை வெற்றிபெறவும் வைத்தார். இதனால் சபாநாயகரும் உடனடியாக அரசு எழுதிய உரையை அவை குறிப்பில் பதிவு செய்தார். இங்குதான் பிரச்சனை புதிய லெவலை அடைந்துள்ளது.

நீட் மோதல் - டீ பார்ட்டி
இதன் மூலம் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது. அறிக்கைகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் நிகழ்ந்து வந்த மோதல் தற்போது வெளிப்படையாக சட்டசபையிலேயே வெடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. முன்னதாக ஆளுநர் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நீட் விலக்கு மசோதாவில் மோதல் ஏற்பட்டது. ஆளுநர் இதில் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். இதனால் ஆளுநரின் டீ பார்ட்டியை திமுக கூட்டணி மொத்தமாக புறக்கணித்தது. அதன்பின் ஆளுநர் இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பினார்.

ஆன்லைன் ரம்மி
பின்னர் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்எல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஆளுநருக்கு எதிராக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி விமர்சன தலையங்கங்களை எழுதி வந்தது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் ஆர். என் ரவியை மிக கடுமையாக தாக்கினார்கள். ஆனாலும் ஆளுநருக்கு உரிய மரியாதையை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். தெலுங்கானாவில் தமிழிசை சௌந்தரராஜன் கேசி ஆர் அரசால் நடத்தப்பட்டது போல தமிழ்நாட்டில் ஆர். என் ரவி நடத்தப்படவில்லை.

தமிழ்நாடு - தமிழகம்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு என்று சொல்ல கூடாது தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறியதாக செய்திகள் வந்தன. இந்த செய்திகள் திமுகவின் ஈகோவை நேரடியாக சீண்டுவது போல இருந்தது. இதையடுத்துதான் இன்று சட்டசபையில் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இதுவரை அறிக்கைகள், கட்டுரைகள் என்று இருந்த மோதல் தற்போது அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது. இந்த மோதல் அடுத்த லெவலை அடைந்து உள்ளது. 1993 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தார். அப்போது சட்டசபையில் இதேபோல் ஆளுநருக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மோதல் ஏற்பட்டது. அதோடு சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார்.

சென்னா ரெட்டி
இதனால் சட்டசபையில் மிகப்பெரிய மோதலே அப்போது வெடித்தது. அதன்பின் தமிழ்நாடு அரசியலில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையில் சட்டசபையிலேயே மோதல் வெடித்தது இல்லை. முக்கியமாக மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த வைத்தார் ஜெயலலிதா. திண்டிவனம் அருகே அவரை வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் அழுத்தம் கொடுத்தனர். ஆளுநர் சென்னா ரெட்டி அப்போதெல்லாம் வெளியே வருவதே பெரிய பிரேக்கிங் செய்தியாக இருந்தது. மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதிமுக எம்எல்ஏக்களை மட்டுமின்றி அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார். ஜெயலலிதா சென்னா ரெட்டிக்கு பெரிய சிம்ம சொப்பனமாக இருந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக அதே ரூட்டை எடுத்து அதிர வைத்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications