இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பே வராது.. திருப்புகழ் குழு இறுதி அறிக்கை தாக்கல்.. முதல்வர் பாராட்டு!
வெள்ளத்தடுப்பு நடவடிக்கை குறித்த திருப்புகழ் கமிட்டியின் இறுதி அறிக்கை மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர், சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழுவிற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி 2021ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகர் மட்டும் மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
இதனால் சென்னை மக்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாயினர். வடகிழக்கு பருவமழை இயல்புக்கு மாறாக பன்மடங்கு அதிகமாக பெய்ததே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்தன.

சென்னை வெள்ளம்
இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. அதேபோல் கடந்த ஆட்சிக் காலத்தில் தியாகராய நகர், கே.கே நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இனி ஆந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பே ஏற்படாது என கூறபட்டது. ஆனால் அந்த பகுதிகளில் தான் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

மழைநீர் வடிகால் பணிகள்
அதேபோல் சென்னையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் முறையாக இல்லாததும், சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணமாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் மழைக் காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ள நீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல் நகர திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

திருப்புகழ் குழு
அந்த குழுவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன கூடுதல் செயலாளருமான திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான 14 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

இடைக்கால அறிக்கை
இந்த குழு சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல், ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் நகர்ப்புற திட்டமிடல் போன்றவை குறித்தும் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தி வந்த நிலையில் இடைக்கால அறிக்கையை கடந்த ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கைக்கு பின் நடவடிக்கை
இந்த அறிக்கையின் பேரில் கடந்த ஆண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சில பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தாலும், அதனை உடனே அகற்றியதோடு சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து, பல்வேறு பணிகள் செய்யப்பட்டதையும் உறுதி செய்தார்.

இறுதி அறிக்கை தாக்கல்
இந்த நிலையில் சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில், சென்னை மாநகரின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications