பரபரத்த சென்னை.. பெரும் தீ! கருகிய 2 பஸ்கள், 2 ஆட்டோ, லாரி, வேன் -தலைநகரை உலுக்கிய கேகே நகர் சம்பவம்
சென்னை: கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய வாகனங்கள் தீயில் கருகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் போக்குவரத்து துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, ஆர்டிஓ அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அங்கு ஏராளமான பேருந்துகள், லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

உரிமையாளர்களால் மீட்கப்படாமல் அங்கு ஏராளமான வாகனங்கள் பழுதாகி புழுதி படர்ந்து காணப்படும். இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிதாக ஏற்பட்ட இந்த தீ, மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் பரவியது கொழுந்துவிட்டு எரிந்தது.
கரும்புகையுடன் கூடிய தீயை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சென்னை தியாகராயர் நகர், கிண்டி, கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாகனங்களில் வேகமாக எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பறிமுதல் செய்யப்பட்ட 2 பேருந்துகள், 2 ஆட்டோக்கள், 1 லாரி, 1 வேன் ஆகிய வாகனங்கள் முழுவதுமாக தீயில் கருகி நாசமாகின. வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த காரணத்தால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டது. இது தொடர்பாக சென்னை கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications