திராவிட மாதம்.. கடைசி நாளில் ஸ்டாலினையே Twitter Spaces-ல் இறக்கிய ஐடி விங்..! திமுகவினர் உற்சாகம்!
சென்னை : நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசஸ்-ல் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் எனத் தொடர்ந்து முழங்கி வரும் ஸ்டாலின், திராவிட மாத கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ட்விட்டரில் பேச இருக்கிறார்.
செப்டம்பர் மாதத்தினை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக ஐடி விங் Twitter Spaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசஸ்-ல் திமுகவின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் திராவிட இயக்க சாதனைகள் பற்றி உரையாற்றி வந்தனர்.
இந்நிலையில், திராவிட மாத கொண்டாட்டத்தின் கடைசி நாளான நாளை முதல்வர் ஸ்டாலின், ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்ற இருக்கிறார். இது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட மாதம்
செப்டம்பர் மாதம் திராவிட இயக்க அரசியலில் முக்கியமான நிகழ்வுகள் நடந்த மாதம். பெரியார், அண்ணா இருவரும் பிறந்த மாதம் செப்டம்பர். திமு கழகம் தொடங்கப்பட்டதும் செப்டம்பர் மாதம் தான். இதையொட்டி ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இந்த ஆண்டு திமுகவின் ஐடி விங்க் சார்பில் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என கொண்டாடி வருகின்றனர். திராவிட மாதம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக துவக்கப்பட்ட ராபின்சன் பூங்கா உள்ளிட்ட குறிப்பிடத்தக்க இடங்களில், திராவிடத் தடம் எனும் நிகழ்வையும் நடத்துகின்றனர்.

ட்விட்டர் ஸ்பேசஸ் உரையாடல்
மேலும், திராவிட மாதத்தையொட்டி ட்விட்டர் உரையாடலையும் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசஸ்-ல் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் திராவிட இயக்க சாதனைகள் பற்றி உரையாற்றுவார்கள் என்று திமுக ஐடி விங் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் எனப் பலரும் பேசி வந்தனர்.

கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் திராவிட மாத கொண்டாட்டத்தின் கடைசி நாளான நாளை, இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசஸில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார். ட்விட்டர் வரலாற்றில் முதன்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ட்விட்டர் ஸ்பேசஸ் மூலம் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடன்பிறப்புகள் உற்சாகம்
ஏற்கனவே, காணொளிக் காட்சி வாயிலாக பல கூட்டங்களில் உரையாற்றி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்ற இருப்பது திமுக உடன்பிறப்புகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட மாடலை இளைஞர்கள் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் ஐடி விங்கின் இந்த முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications