பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி!
சென்னை: 1991ல் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியின் வரலாற்றிலேயே முதல் முறையாக 20க்கும் குறைவான தொகுதிகளில் தற்போது போட்டியிடுகிறது பாமக. எதிர்வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது அன்புமணி தலைமையிலான பாமக.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது.

அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு
அண்மையில் டெல்லி சென்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.
பாமகவுக்கு 18 சீட்
அதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1980ல் வன்னியர் சங்கத்தை தொடங்கினார் ராமதாஸ். 1989ல் பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 6% வாக்குகளைப் பெற்றது பாமக. சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 1991ல் களமிறங்கியது பாமக.
1991 முதல்
1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாமக முஸ்லிம் லீக், குடியரசுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்தன. 199 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. பண்ருட்டி சட்டசபை தொகுதியில் பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார்.
1996 சட்டசபை தேர்தல் - பாமக - திவாரி காங்கிரஸ் கூட்டணி 116 தொகுதிகள்
2001 சட்டசபை தேர்தல் - அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகள்
2006 சட்டசபை தேர்தல் - திமுக கூட்டணியில் 31 தொகுதிகள்
2011 சட்டசபை தேர்தல் - அதிமுக கூட்டணியில் 30 தொகுதிகள்
2016 சட்டசபை தேர்தல் - தனித்துப் போட்டி 232 தொகுதிகள்
2021 சட்டசபை தேர்தல் - என்.டி.ஏ கூட்டணியில் 23 தொகுதிகள்
2026 சட்டசபை தேர்தல் - என்.டி.ஏ கூட்டணியில் 18 தொகுதிகள்
1996 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பாமகவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கியிருந்து திமுக. தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சனையால் அந்தக் கூட்டணி உடைந்தது. திவாரி காங்கிரஸ் உடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த பாமக, 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
2001 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது பாமக. தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. 20 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் பாமக படுதோல்வி அடைந்தது.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது பாமக. 31 இடங்களில் போட்டியிட்ட பாமக 18 இடங்களில் வென்றது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது பாமக. ஆனால் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 23 தொகுதிகளில் போட்டியிட்டது பாமக. இதில் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில், ராமதாஸ் - அன்புமணி இடையே பிளவு ஏற்பட்ட நிலையில், எதிர்வரும் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. ராமதாஸ் - சசிகலா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 35 ஆண்டு கால வரலாற்றில் பாமக மிகக் குறைவான தொகுதிகளில் இப்போதுதான் போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications