“மோடி ஆட்சி பலவீனத்தால் தமிழக மீனவர்கள் மீது இலங்கையின் தாக்குதல் தொடர்கிறது": மீனவர் காங்கிரஸ்
சென்னை: அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருவதற்கு, நரேந்திர மோடி அரசு பலவீனமாக இருப்பதே காரணம் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் பாம்பனைச் சேர்ந்த எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களிலிருந்து கடலுக்குச் சென்ற ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான நான்கு விசைப் படகுகளையும் அதிலிருந்த 30 இராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து கைது செய்தனர்.

மேலும் காரைக்காலை சேர்ந்த விஜயன் சிவராமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் சிறைப்பிடித்து 17 மீனவர்கள் என மொத்தம் தமிழகம், காரைக்கால் என 47 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு தண்டனை, படகுகளுக்கும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் 2018 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் இதுவரையிலும் 250 தமிழக மீனவர்களின் படகுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 180 படகுகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளது.
நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 47 மீனவர்கள் மற்றும் 5 படகுகளையும் பாதுப்புடன் திருப்பி அனுப்பி வைக்க மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications