முத்தூட், மணப்புரத்தில் தங்க நகையை அடகு வைத்திருக்கிறீர்களா! RBI போட்ட புது ரூல்ஸ்
சென்னை: தங்க நகை மீது வழங்கப்படும் நகைக்கடன் பற்றி ரிசர்வ் வங்கி புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனால் முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் போன்ற நிறுவனங்களில் நகையை அடகு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் நகைக்கடன் வழங்குநருக்கானதுதான். இருப்பினும் வாடிக்கையாளர்கள் இது பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

அதாவது, இனி நகை கடன் வழங்குபவர்கள் தெளிவான ஒழுங்குமுறை பின்பற்ற வேண்டும். தங்க நகை கடன் வழங்கும் முறையில் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். நகைக்கடன் தொடர்பாகவும், வழங்கப்பட்ட கடனுக்கு கட்டப்படும் வட்டி தொடர்பாகவும் தொடர் கண்காணிப்பு அவசியம். புதிய விதிமுறைகளின்படி கடன் பெறுபவர்களுக்கு, அவரின் திருப்பி செலுத்தும் திறனை கொண்டு கடன் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அடமானம் வைத்த தங்கத்தின் மதிப்புக்கு எதிராக நீங்கள் பெறும் கடனின் அளவு கணக்கிடப்பட வேண்டும். இந்த அளவு 75% ஆக இருக்க வேண்டும். அதாவது வாடிக்கையாளர் அடகு வைக்கும் நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் எனில், கடன் ரூ.75,000 மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது ஆங்கிலத்தில் Loan-to-Value (LTV) என்று குறிப்பிடப்படுகிறது. தனிப்பட்ட கடன்களுக்கு வருமானத்தை ஆய்வு செய்வதும், நிறுவன கடன்களுக்கு பணப்புழக்கத்தை ஆய்வு செய்வதும் முக்கியம்.
எல்டிவி அளவு 75% என்பதை கடன் காலம் முழுவதும் பின்பற்றப்பட வேண்டும். இந்த அளவு 75%ஐ தாண்டினால் நிறுவனத்தின் லாபத்திலிருந்து 1% தொகையை பாதுகாப்பு நிதியாக ஒதுக்க வேண்டும். அதாவது இன்று அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சமாக இருக்கிறது. எனவே ரூ.75,000 வரை கடன் கொடுக்கப்படுகிறது. நாளைக்கே தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.90,000ஆக குறைந்துவிட்டால் எல்டிவி அளவு 75% என்பது மாறும்.
எனவே இந்த நேரத்தில், இந்த நகை மீது நிறுவனம் பெறும் லாபத்திலிருந்து 1 சதவிகிதத்தை பாதுகாப்பு நிதியாக எடுத்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இந்த நிபந்தனைகளை பெரிய பெரிய நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடைபிடித்துவிடும். மற்ற சாதாரண நிறுவனங்கள் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். கிராமங்களில் குறுகிய கால கடன்களுக்கு நகைகளை பலர் அடகு வைப்பார்கள். இதனை அடகு பிடிக்கும் நிறுவனங்கள், அடகு வைப்பவர்களின் சம்பளம் என்ன? மாத வருமானத்திற்கு அடையாளம் என்ன? சாலரி ஸ்லிப் இருக்கிறதா? என்பதையெல்லாம் சரி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே சிறு நிறுவனங்களுக்கு சிக்கல்தான்.
அதேநேரம் எல்டிவி 75 சதவிகிதத்தை கறாராக பின்பற்றுவதும், அதை மீறும்போது நிறுவனத்தின் லாபத்திலிருந்து ஒரு சதவிகிதத்தை எடுத்து வைப்பதும் சிரமம்தான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதையெல்லாம் ஆர்பிஐ எப்படி சமாளிக்கப்போகிறது? ஒருவேளை விதிகளை மீறும் சிறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறதா? ஆயிரத்திற்கும், ஐநூறுக்கும் அடகு கடை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தால் அவர்கள் எங்கே போவரார்கள்? இதெல்லாம் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications