காஞ்சிபுரம் அருகே கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.4.50 கோடி..பணத்தை கேரளாவில் தேடும் போலீசார்!
சென்னை: காஞ்சிபுரம் அருகே கத்தி முனையில் 4.5 கோடி ரூபாயை காருடன் கடத்திய 5 கேரள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து, கேரளா அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூபாய் 4.5 கோடி பணத்தை கைப்பற்ற தனிப்படையினர் கேரளா சென்றுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள போரிவலி பகுதியைச் சேர்ந்தவர் ஜாடின் (56). இவர், தன் சகோதரருடன் சேர்ந்து, 2017ல் இருந்து, கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் மூலம், கமிஷன் அடிப்படையில் நாடு முழுதும் பணம் மற்றும் பொருட்களை அனுப்பி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, 'ஹூண்டாய் கிரெட்டா' காரில் உள்ள லாக்கரில், 4.5 கோடி ரூபாயை வைத்து, தங்கள் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் பியூஷ்குமார், தேவேந்திர படேல் ஆகியோரை, கர்நாடக மாநிலம் பெங்களூரொல் இருந்து, சென்னை சவுகார்பேட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
2 மாதங்களுக்கு முன் இந்த கார் காஞ்சிபுரம், ஆட்டுப் புத்துார் அருகே வந்தபோது, மூன்று கார்களில் வந்த மர்ம நபர்கள், பியூஷ்குமார் மற்றும் தேவேந்திர படேல் சென்ற காரை மடக்கினர். கத்தி முனையில், பணத்துடன் அந்தக் காரை கடத்தினர். ஆற்காடு அருகே சென்ற போது, பணத்தை கொள்ளையடித்து விட்டு, அந்த காரை அங்கேயே விட்டுச் சென்றனர். ஓட்டுநர்கள் பியூஷ்குமார், தேவேந்திர படேல் ஆகியோரையும், அங்கேயே இறக்கிவிட்டு தப்பினர்.
இச்சம்பவம் குறித்து, மும்பையில் இருந்த தங்கள் நிறுவன உரிமையாளர் ஜாடினிடம், இருவரும் தகவல் தெரிவித்தனர். அதன்படி, ஜாடின் காஞ்சிபுரம் வந்து, பொன்னேரிக்கரை போலீசாரிடம் புகார் அளித்தார். எஸ்.பி சண்முகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன், தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று பாலக்காடு, கொல்லம், திருச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த சந்தோஷ் (42), சுஜிலால் (36) உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் மேலும் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார், கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து, கேரளா அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 4.5 கோடி பணத்தை கைப்பற்ற தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications