சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!
சென்னை: சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமானங்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கின்றன.
நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே சென்னை மக்கள் உஷாராகிவிடுவார்கள். ஏனெனில் இந்த காலத்தில் புயல் சின்னம் அல்லது பருவமழை தீவிரமெடுக்கும். இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் இந்த ஆண்டும் நவம்பர் மாதத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில், "கடந்த 10ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று காலை வரை அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது. நேற்று மாலை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 2 தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
எனவே இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு நோக்கி நகர தொடங்கியுள்ளது" என்று தெரிவித்திருக்கிறது.
மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையின் மடிப்பாக்கத்தில் 66 மி.மீ மழை பெய்திருக்கிறது. மொத்தமாக சென்னையில் 21 இடங்களில் 15 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அண்ணா நகர் மேற்கில் 15 மி.மீ, அம்பத்தூரில் 5 மி.மீ, கொளத்தூரில் 10 மி.மீ, பெரம்பூரில் 12 மி.மீ, புழல் 4 மி.மீ, மாதாவரத்தில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் சராசரியாக 25 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
எனவே மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் சில பகுதியில் ஏற்பட்டிருக்கின்றன. விமான போக்குவரத்தும் மழை காரணமாக தாமதமாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30-45 நிமிடங்கள் வரை தாமதமாகவும், ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications