மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட கலர் பஞ்சுமிட்டாய்.. உயிருக்கு ஆபத்தா? உணவு பாதுகாப்புத்துறை சோதனை
சென்னை: பஞ்சுமிட்டாய் கலர் கலரா இருக்க அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் உடல் நலக்கேடு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
பஞ்சுமிட்டாய் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் உணவு பொருள். கடற்கரை தொடங்கி கடை வீதிகள் வரை இவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த பஞ்சுமிட்டாயில் ஆபத்தான ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதாவது, புதுச்சேரி கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில் தீப்பெட்டி மற்றும் ஊதுவத்தி ஆகியவை நிறம் பெறுவதற்காக சேர்க்கப்படும், ரோடமின் பி என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரசாயனத்தை உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. குறைந்த விலைக்கு கிடைப்பதால் இதனை பஞ்சுமிட்டாய் வியாபாரிகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பஞ்சுமிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மட்டுமல்லாது புதுச்சேரி முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்டுவருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "புதுச்சேரியில் ஆய்வின் போது பஞ்சுமிட்டாயில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இனி பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய வேண்டும் எனில் உணவு பாதுகாப்பு துறையின் தர சான்றிதழ் அவசியம் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சில வியாபாரிகள் தமிழகத்திலிருந்து பொருட்களை வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்கள். எனவே அங்கும் இதுபோன்று சோதனை நடைபெறும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பஞ்சுமிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் ஆலை இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஆலையிலும், தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யப்படும் ஆலையிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்று கூறியுள்ளனர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புற்று நோய்யை உருவாக்க கூடிய ரசாயன பொருள் பஞ்சுமிட்டாயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications