EXCLUSIVE: ஷவர்மா.. விளம்பரத்துக்காக ரெய்டு! வீணாக ஹோட்டல்கள் பெயர் கெடுகிறது: ஹோட்டல் சங்க செயலாளர்
சென்னை: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளம்பரத்துக்காக சோதனை செய்வதால் உணவகங்களின் பெயர் கெடுகிறது என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட 11 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். இதனிடையே ஷவர்மா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உணவக உரிமையாளர் சங்கம்
இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க செயலாளர் சீனிவாசனிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம். அதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் மாநிலம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளை நடத்தி வருகிறோம். குறிப்பாக கறிகளை நன்றாக வேக வைத்து கொடுக்க சொல்கிறோம்.

சேமிப்பில் முன்னெச்சரிக்கை அவசியம்
கறிகளை பாதுகாத்து வைப்பதற்கான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேகவைத்த கறி, வேக வைக்காத கறிகளை தனித்தனியாக வைக்க வேண்டும். கடல் உணவுகள், சிக்கன், மட்டனை தனித்தனியாக சேமிக்க வேண்டும். அதன் வெப்பத்தை முறையாக வைக்க வேண்டும். மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டரை வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறோம்.

சவர்மாவை மொத்தமாக தடை செய்ய வேண்டுமா?
ஷவர்மா அதிகம் விற்பனையாகிறது. அதை உரிய முன்னெச்சரிக்கை முறைகளை கொண்டு தயாரித்து கொடுக்க வேண்டும். நல்ல பயிற்சிபெற்ற அனுபவம்வாய்ந்த சமையல்காரரை வைத்து தயாரிக்கலாம். அரைகுறையாக தெரிந்தவர்களை வைத்து சமைக்கும்போது ஆபத்து ஏற்படுகிறது. அதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக தடை செய்ய வேண்டும் என அவசியமில்லை.

குறைந்த விலையில் தரம் இருக்காது
சென்னை போன்ற நகரங்களில் அதிக விலையில் தரமாக பிரியாணி விற்கும் கடைகளும் உள்ளன. ரூ.10-க்கு தரமற்ற பிரியாணி விற்கும் கடைகளும் உள்ளன. மட்டன், சிக்கன் விற்கும் விலைக்கு ரூ.10-க்கு எப்படி பிரியாணி விற்க முடியும். அது உடலுக்கு கேடுதானே. மக்களே முதலில் சிந்திக்க வேண்டும். ஒரு சில சிறிய கடைகள் செய்யும் தவறு ஒட்டுமொத்த துறையையே பாதிக்கிறது.

விளம்பரத்துக்காக சோதனை
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளம்பரத்துக்காக கடைகளில் சோதனை செய்கிறார்கள். அதை நாங்கள் நீண்ட காலமாக நாங்கள் கண்டித்து வருகிறோம். டெல்லியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆணையத்திடமே இது குறித்து மனு அளித்துள்ளோம். திடீர் சோதனைகள் உணவகங்கள் மீதான நற்பெயரை கெடுக்கும். மக்களுக்கு தரமான உணவு தர வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமல் விளம்பரத்துக்காக செய்கின்றனர்.

உணவகங்களின் பெயர் கெட்டுப்போகிறது
உணவு பரிசோதனை செய்த பிறகு தரமாக இருந்தால் அதை வெளியிடவும் மாட்டார்கள். இது 2011 ஆம் ஆண்டிலிருந்தே உணவு பாதுகாப்புத்துறை செய்யும் தவறு. உணவு பாதுகாப்பு சட்டப்படி இவர்கள் சோதனை செய்வதில்லை. மதுரையில் ஒரு அதிகாரி பிரபலமான பேக்கரிக்கு சென்று எந்த ஆய்வும் செய்யாமல் கலர் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்துக்காக பலகாரங்களை சாக்கடையில் வீசுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் கடையின் பெயர் கெட்டுப்போகாதா?

தெருக்கடை உணவுகள்
எல்லாவற்றிலும் ஆபத்து இருக்கிறது. உணவு என்று வரும்போது பாதுகாப்பு அவசியம். நல்ல உணவகங்கள் ஏராளமாக உள்ளன. சில தெருக்கடைகள் செய்யும் தவறுகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பல தெருக்கடைகள் சாக்கடை ஓரம் இயங்குகின்றன. பேருந்து நிலையங்களில் தூசியில் வடை போட்டு விற்கிறார்கள். சாலையோர கடைகளில் போடும் பரோட்டவில் மைதா முழுவதும் தூசியை இழுத்துக்கொள்ளும். அது எப்படி பாதுகாப்பாக உணவாக இருக்கும்?
Recommended Video

வரும் முன் காப்பதே சிறந்தது
எந்த கடைகளில் உணவு தரமாக இல்லை என்பதை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். பாதிப்பு ஏற்படவுடன் சோதனை செய்யாமல் முன்னதாகவே இதை மேற்கொள்ள வேண்டும். சோதனையில் சிக்கிய பெரும்பாலான கடைகள் முறைபடுத்தப்படாதவை. கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யாரும் வேண்டுமென்றே தரமற்ற உணவை சமைக்க மாட்டார்கள். அதைதான் நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கையாக வைக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications