Lung Transplant: மீனம்பாக்கம் டூ தேனாம்பேட்டை மெட்ரோவில் முதல்முறையாக கொண்டு வரப்பட்ட நுரையீரல்!
சென்னை: பெங்களூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு எடுத்துவரப்பட்ட நுரையீரல், மீனம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ்ஸுக்கு மெட்ரோ ரயிலில் நேற்று பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மெட்ரோ ரயிலில் முதல் முறையாக நுரையீரல் கொண்டு வரப்பட்டது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் வாயிலாக நுரையீரலை மருத்துவக் குழுவினர் எடுத்து வந்தனர். அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 2.07 மணிக்கு வந்தனர்.

அப்போது சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்கள் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன் அந்த குழுவினர் மெட்ரோ ரயிலில் ஏறி, 7 நிலையங்களை கடந்த 2.28 மணிக்கு தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கிருந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்குத்தான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இந்த நுரையீரல் வந்தது.
இது வரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் இது போன்ற உறுப்புகள் வந்தன. நீண்ட தூரம் பயணிக்கப்படும் இடங்களுக்கு எல்லாம் குறைந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வாகனத்தை இயக்கி பல உயிர்களுக்கு இது போன்ற உறுப்புகள் கிடைக்க உதவியுள்ளனர்.
ஆனால் நுரையீரல் ஒன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது இதுதான் முதல் முறை என்கிறார்கள். இதை பத்திரமாக கொண்டு வந்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்தன. ஒரு இடத்தில் கூட தாமதிக்காமல் ஓடிக் கொண்டே இருந்தனர்.
Chennai Metro Rail Facilitates Timely Transportation of Donor Lungs for Transplantation
— Chennai Metro Rail (@cmrlofficial) November 8, 2025
Chennai Metro Rail Limited played a crucial role in supporting life-saving organ transportation from Meenambakkam Metro Station to AG-DMS Metro Station today 8.11.2025, with the recent… pic.twitter.com/nJXobVyuEh
இதுகுறித்து மெட்ரோ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தான உறுப்பு குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ இரயிலில் கொண்டுசெல்லபட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இன்று (08.11.2025) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏ.ஜி.-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை உயிர் காக்கும் நுரையீரல் தான உறுப்பை கொண்டு செல்வதற்கு, துரித போக்குவரத்து உதவியை வழங்கி முக்கிய பங்காற்றியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ இரயில்வே (Carriage And Ticket) திருத்த விதிகள், 2023-ன் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டது. பெங்களூரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உறுப்புகளைக் கொண்டு வந்த மருத்துவ குழுவினர், விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 02:07 மணிக்கு மீனாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். சென்னை மெட்ரோ இரயில் அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் குழுவினர் மெட்ரோ இரயிலில் ஏறி, ஏழு நிலையங்களைக் கடந்து, 02:28 மணிக்கு ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை பத்திரமாக வந்தடைந்தனர். அங்கிருந்து, மருத்துவக் குழு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தது. அங்குதான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது. சென்னை மெட்ரோ இரயில், திறம்பட்ட நகரப் போக்குவரத்தை மட்டுமின்றி அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உயிர் காக்கும் முயற்சிகளில் பங்களித்து பொதுச்சேவைக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications