இஸ்ரோவின் பலே திட்டம்.. பிப் 17ல் விண்ணில் பாயும் ‛இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைகோள்.. ஏன் முக்கியம்?
சென்னை: வானிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து அலர்ட் செய்யும் வகையிலான ஆய்வுக்கான 'இன்சாட்-3டிஎஸ்' என்ற அதிநவீன செயற்கைகோளை இஸ்ரோ பிப்ரவரி 17 ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயற்கைகோளின் வேலை என்ன? இந்த செயற்கோள் மேற்கொள்ளும் ஆய்வு என்ன? மற்றும் இந்த செயற்கைகோள் ஏன் முக்கியம்? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
இந்திய விண்வெளி ஆய்வுகளை இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தரையிறக்கி சாதனை படைத்தது.

இந்நிலையில் தான் இஸ்ரோ சார்பில் வரும் 17ம் தேதி ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட் மூலம் 'இன்சாட்-3டிஎஸ்' என்ற அதிநவீன செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
அதாவது இந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பான ஆய்வுகளை ‛இன்சாட்' செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வானிலை முன்னறிவிப்பு தொடர்பான விபரங்களை முன்கூட்டியே அனுப்பி வருகிறது. இதன்மூலம் புயல், மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து அதில் இருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ‛இன்சாட்' செயற்கைகோள் வரிசையில் தான் அதிநவீன 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோள் வரும் 17ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிப்ரவரி 17 தேதி மாலை 5 மணிக்கு ஜிஎஸ்எல்வி- எஃப் 14 ரக ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணி தற்போது நடந்து வருகிறது. இந்த செயற்கைகோளில் முக்கிய ஆய்வு கருவிகள் உள்ளன. குறிப்பாக இமேஜர்(Imager), சவுண்டர் (Sounder), டேட்டோ ரிலே டிரான்ஸ்பாண்டர் (Data relay Transponder), செயற்கைகோள் உதவியுடன் தேடல் மற்றும் மீட்டு டிராண்பாண்டர் (Satellite aided Search and Rescue Transponder) என 4 முக்கிய கருவிகள் உள்ளன.

இதில் இமேஜர் கருவி என்பது 6 வகையான அலைநீலங்களின் பூமியின் போட்டோக்களை எடுத்து வழங்கும். இதன்மூலம் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவை கணக்கீடு செய்ய முடியும். அதேபோல் பிற கருவிகளும் வானிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வங்கு வகிக்க உள்ளது. இதன்மூலம் புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தொடர்பான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும்.
குறிப்பாக இந்த செயற்கைகோள் புயலின் நகர்வு, மழைக்கால மேகம், இடி மின்னல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள், பூமி மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விபரங்களை முன்கூட்டியே வழங்க உள்ளது. இந்த செயற்கைகோள் என்பது 2,274 கிலோ எடை கொண்டுள்ளது. மத்திய அரசின் பூமி அறிவியல் துறையின் நிதியில் செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2016ல் விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி மற்றும் இன்சாட் -3டிஆர் உள்ளிட்ட செயற்கைகோள்களுடன் சேர்ந்து இன்சாட் - 3டிஎஸ் செயற்கைகோள் செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications