மோசடி பத்திரம்.. பதிவுத்துறையில் முளைத்த மேட்டர்.. மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில் சிக்கல்?.. ஏன்
சென்னை: பத்திரப்பதிவுகளில் "மோசடி பத்திரம்" என்றால் என்ன தெரியுமா? இந்த மோசடி பத்திரம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. என்ன அது?
கடந்த 2021ல், தமிழக அரசு பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது.. இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு கொண்டுவரப்பட்டன..

அதன்படி, மோசடி புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என்பதே அந்த திருத்தம்.
அரசு அதிரடி: இதற்காக தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் மனமார்ந்த பாராட்டுக்களையும் அன்று தெரிவித்து கொண்டதையும் நாம் மறக்க முடியாது. எனினும், மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில், சில சிக்கல்கள் இன்னமும் நீடிப்பதாக தெரிகிறது.
அதனால்தான், இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், பத்திரப்பதிவு விதிமுறைகளில் திருத்தம் செய்ய, பதிவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக, சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.. முக்கியமாக, ஒரு நபரின் சொத்தை அவருக்கே தெரியாமல், ஆள்மாறாட்டம் செய்து, அல்லது போலி ஆவணங்களை தாக்கல் செய்து, பதிவு செய்து விடுகிறார்களாம்.
நடைமுறை சிக்கல்கள்: அதாவது, ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு சொத்துக்களை விற்கும்போது, அதில் ஏதாவது ஒரு பத்திரம் மட்டும் மோசடியாக நடந்து இருக்கும்..
ஆனால், குறிப்பிட்ட நபர் விற்ற சொத்துக்கள் தொடர்பான அனைத்து பத்திரங்களையும் ரத்து செய்யும்போது, பல பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான், மோசடி நடந்த ஒரு பத்திரத்தை மட்டும் தனியாக பிரித்து, ரத்து செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் தேவையாக இருப்பதாகவும், இதுதொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, திருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மோசடி பத்திரம்: மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை ஏமாற்றி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்தால் அதுதான் மோசடி பத்திரம் ஆகும். போலியாக ஒரு உரிமை ஆவணத்தை உருவாக்கி, அந்த போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரமும் மோசடி பத்திரமாகும். போலியாக பட்டா தயாரித்தால், அதுவும் மோசடி பத்திரம் என்றே கருதப்படும்.
முளைத்த பிரச்சனை: இப்படிப்பட்ட சூழலில், பழைய நடைமுறைகளை சுட்டிக்காட்டி, மோசடி பத்திரங்களை ரத்து செய்ய கோரும் மனுக்களை, மாவட்ட பதிவாளர்கள் சிலர் தள்ளுபடி செய்துவிடுகிறார்களாம். இப்படியொரு புகார் இப்போது முளைத்துள்ளது.. மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், கிட்டத்தட்ட 1,055 மோசடி பத்திரங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பதிவுத் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எனினும், மோசடி பத்திரம் தொடர்பாக சில அதிகாரிகள் மீது அதிருப்தி உள்ளதால், தஞ்சாவூரை சேர்ந்த சாமி மனோகரன் என்பவர், பதிவுத்துறை தலைவருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்.
புகார் மனுக்கள்: அந்த புகார் மனுவில், "மோசடி பத்திரங்கள் விவகாரத்தில், அரசு அமல்படுத்திய சட்டத் திருத்தத்தை முடக்கும் வகையில், மாவட்ட பதிவாளர்கள் சிலர் செயல்படுகிறார்கள்.. பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்துக்கு உட்பட்ட, ஒரு பத்திரத்தை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து விட்டனர். பத்திரங்களை பதிவு செய்யும்போது, முந்தைய பதிவுகளை வில்லங்க சான்று வாயிலாக சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாகாத காலத்தில், இந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற பத்திரங்களை, புதிய சட்டத்திருத்த அடிப்படையில் ரத்து செய்ய முடியாது என்று மாவட்ட பதிவாளர் தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது. எனவே, இதில் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பெருத்த நம்பிக்கை: ஏற்கனவே, வில்லங்க சான்றிதழில் எழுத்து பிழைகளை சரி செய்ய கோரும் விண்ணப்பங்களை சில அலுவலர்கள் கிடப்பிலேயே போட்டுவிடுவதாக புகார்கள் உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் சொன்னபோது, "இப்படி வேண்டுமென்றே தாமதிக்கும் நபர்கள் மீதும், மோசடி பத்திர ரத்து சட்டத்துக்கு எதிராக செயல்படும் மாவட்ட பதிவாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி தந்திருந்த நிலையில், இந்த விஷயத்திலும் உயர் அதிகாரிகள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications