தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ புரசை வி.எஸ்.பாபு.. "எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை” என பேட்டி
சென்னை: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் புரசை விஎஸ் பாபு தவெகவில் இணைந்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவான விஎஸ் பாபு தவெகவில் இணைந்துள்ள நிலையில், "எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை. அதிமுகவின் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
புரசை வி.எஸ். பாபு முன்னாள் எம்.எல்.ஏ. வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர், முன்பு திமுகவில் இருந்து சென்னை புரசைவாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக பொறுப்பு வகித்தவர். அந்தக் காலகட்டத்தில் வடசென்னை மாவட்ட அளவில் திமுகவின் முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் முதல் முறை போட்டியிட்டபோது, அவரது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் வி.எஸ்.பாபு. பின்னர் 2011 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சேகர்பாபு திமுகவுக்கு வந்த நிலையில், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதிய புரசை வி.எஸ்.பாபு அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவில் சேர்ந்த பிறகு அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் புரசை வி.எஸ். பாபுவை நியமித்தார். இந்நிலையில் அண்மையில் அவர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் வி.எஸ். பாபு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
முன்பு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடேஷ் பாபு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வி.எஸ். பாபு நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் அண்மையில் விஎஸ் பாபுவும் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருமங்கலம் மோகன் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக புரசை விஎஸ் பாபு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். விஜய் தலைமையிலான தவெகவில் மாற்றுக் கட்சி பிரமுகர்கள் பலர் இணைந்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ புரசை விஎஸ் பாபுவும் தற்போது இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு, பனையூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கும்போது, "எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை. அதிமுகவின் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை; எனக்கு அங்கு ஒத்துழைப்பு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ச்சியாக தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்புக் கழகத்தில் இருந்தவருமான ஜே.சி.டி. பிரபாகர், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏக்களும் தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications