“நேரில் பார்த்தேன்.. விமானத்தில் பரபர விநாடிகள்”! சென்னை போலீசாரை பாராட்டிய அதிமுக முன்னாள் நிர்வாகி
சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் சென்னை விமான நிலையத்தில் இருந்து எஸ்கேப் ஆகும்போது போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவத்தை நேரில் பார்த்த அதிமுக முன்னாள் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் (மார்ச் 25) ஒரே நாளில் சென்னையில் ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த செயின் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன.

சென்னை செயின் பறிப்பு
குற்றவாளிகளை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கி வந்தனர்.
விமானத்தில் கைது
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் வாயிலாக தெரியவந்த நிலையில், ஹைதராபாத், மும்பைக்கு செல்ல இருந்த விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விமானத்தில் இருந்த 2 இளைஞர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தான் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்தது.
இதேபோல ரயில் மூலம் தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையனை ஆந்திரா அருகே ஓடும் ரயிலில் மடக்கி போலீசார் கைது செய்தனர். இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் என்ற நபர் நேற்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பாராட்டு
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட விமானத்தில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவத்தை நேரில் பார்த்த அதிமுக முன்னாள் நிர்வாகியும், பிரச்சார வியூக வகுப்பாளருமான அஸ்பயர் சுவாமிநாதன், சென்னை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அஸ்பயர் சுவாமிநாதன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விமானத்தில் நான் மறக்க முடியாத ஒரு தருணம். செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் செல்லும் விமானத்தில் நான் இருந்தபோது, அரிய நிகழ்வு ஒன்றை நேரில் கண்டேன். வேகம், விவேகத்துடன் கூடிய அமைதியான காவல்துறையின் செயல்பாட்டை நேரில் பார்த்தேன்.
நேரில் பார்த்தேன்
சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட நாங்கள் தயாரானபோது, இரண்டு அதிகாரிகள் அமைதியாக உள்ளே நுழைந்து, கடந்த சில மணி நேரங்களில் பல தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, விமானம் மூலம் விரைவாகத் தப்பிக்கத் திட்டமிட்ட ஒரு சீரியல் செயின் பறிப்பு கொள்ளையனைப் பிடித்தனர். சென்னை போலீசாரின் சாதுர்யமான நடவடிக்கை வியக்க வைத்தது.
நன்றாக டிப் டாப்பாக உடையணிந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் ஏறிய செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவர், ஒரு சிறிய டிராமாவுக்கு பிறகு விமானத்திலேயே கைது செய்யப்பட்டார். என்ன நடக்கிறது என்பது பற்றி மற்ற பயணிகளுக்கு தெரியாத நிலையில், அந்த நபரையும் சூழ்நிலையையும் கிட்டத்தட்ட அமைதியாகக் கையாண்ட சென்னை காவல்துறையினருக்கு நன்றி. செய்திகள் வந்தபிறகு தான் நடந்தது என்னவென்றே உணர முடிந்தது.
பெருமையா இருக்கு
இது நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சென்னை காவல்துறையின் சிறப்பான நடவடிக்கை. சென்னை நகரம் முழுவதும் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒரு குழுவை, சக பயணிகளுக்கு எந்த குழப்பமோ அல்லது தொந்தரவும் இல்லாமல் கைது செய்துள்ளனர். இது செயல்படுத்தப்பட்ட துல்லியம் மற்றும் தொழில்முறை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
சென்னை மாநகர காவல்துறைக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகள். காவல்துறை மற்றும் அதிகாரிகளின் விழிப்புணர்வு மற்றும் செயல்திறனுக்காக நீங்கள் எங்களை அனைவரும் பாதுகாப்பாகவும் பெருமையாகவும் உணர வைத்தீர்கள்." என முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அஸ்பயர் சுவாமிநாதன்
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் அஸ்பயர் சுவாமிநாதன். 7 ஆண்டுகளாக அதிமுகவுக்கு சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொண்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஐடி விங் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, சென்னை மண்டல அதிமுக ஐடி விங் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். பின்னர், எடப்பாடி பழனிசாமி தரப்பு உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகினார்.












Click it and Unblock the Notifications