அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ்
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மிகப்பெரிய அதிர்வலைகளை சந்தித்து வரும் கட்சியாக அதிமுக பார்க்கப்படுகிறது. தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாதது மட்டுமல்லாமல், கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி, நிர்வாகிகள் வெளியேறல், முன்னாள் அமைச்சர்களின் அமைதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிமுக தலைமை தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலின் பல ஆண்டுகால அரசியல் கணக்குகளை தலைகீழாக திருப்பிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளின் வாக்கு வங்கியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக அதிமுகவுக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டதுடன், தேர்தலுக்கு பிந்தைய உள்கட்சி மோதல்கள் கட்சியை மேலும் சிக்கலில் தள்ளியதாக கூறப்படுகிறது.
அதிமுக
இதன் விளைவாக சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து புதிய முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது அதிகம் பேசப்படும் பெயராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாறியுள்ளார். கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் ஏற்பட்ட தோல்விகள் அவரை அரசியல் ரீதியாக ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயக்குமார்
அதிமுகவில் தொடர்ந்து நடைபெற்று வரும் அதிகாரப் போட்டி மற்றும் உட்கட்சி கருத்து வேறுபாடுகளும் அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாம். ஒருகாலத்தில் அதிமுகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக இருந்த ஜெயக்குமார், சமீப காலமாக அரசியல் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடாமல் இருக்கிறார். பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள், ஊடக சந்திப்புகள் போன்றவற்றிலும் அவர் பங்கேற்பது குறைந்துள்ளது.
கட்சித் தாவல்
இந்த சூழ்நிலையில்தான் ஜெயக்குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாவிட்டாலும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது மட்டும் உண்மை. ஏற்கனவே சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்பில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜெயவர்தன்
அந்த பட்டியலில் ஜெயக்குமாரின் பெயரும் தற்போது இணைந்துள்ளது. மேலும், அவரது மகன் ஜெயவர்தனும் அரசியல் நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபடாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், எதிர்கால அரசியல் பயணத்தை எந்த திசையில் கொண்டு செல்லலாம் என்பது குறித்து குடும்ப அளவிலும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள சூழல், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே சில முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியுள்ள நிலையில், மேலும் முக்கிய தலைவர்கள் வெளியேறினால் அது கட்சியின் கட்டமைப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போது வெளியாகி வரும் தகவல்கள் அனைத்தும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களாகவே உள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
ஜெயக்குமார் அல்லது அவரது ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள அதிருப்தி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேகமான வளர்ச்சி ஆகியவை காரணமாக, ஜெயக்குமார் தவெகவுக்கு தாவுவார் என்றே சொல்கின்றனர் ராயபுரம் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications