Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மைத்ரேயன் எத்தனை பல்டி..? பாஜக → அதிமுக → பாஜக → அதிமுக → திமுக.. மாறி மாறி தாவிய மாஜி எம்.பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் முன்னாள் எம்.பியும் அமைப்பு செயலாளராக இருந்தவருமான மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் இருந்த மைத்ரேயன் பின்னர் அதிமுகவுக்கு மாறி 3 முறை எம்.பியாக இருந்து அதன் பிறகு பாஜக சென்று மீண்டும் அதிமுகவுக்கு தாவி இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார்.

அரசியலில் டைம் லூப் டிராவல் செய்து வருகிறார் முன்னாள் எம்.பி மைத்ரேயன். ஆர்.எஸ்.எஸ், அதைத்தொடர்ந்து பாஜகவில் முக்கிய பதவிகளை வகித்த மைத்ரேயன் கடந்த 2000 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். மூன்று முறை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக செயல்பட்ட மைத்ரேயன், 2023ல் பாஜகவுக்கு சென்றார். 2024ல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் முதல் முறையாக திமுகவில் இணைந்துள்ளார்.

Former AIADMK MP Maitreyan Switches Sides Again Joins DMK in Political Time Loop

மைத்ரேயன் அரசியல் வாழ்க்கை

சென்னையைச் சேர்ந்த மைத்ரேயன் மருத்துவராகப் பணிபுரிந்தவர். மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனார். அதன் பிறகு 1995 முதல் 1997 வரை பாஜக யின் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை பாஜக மாநில துணைத் தலைவராகவும், 1999ல் சில காலம் மாநில தலைவராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ராஜ்யசபா எம்.பியாக 3 முறை

கடந்த 2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மைத்ரேயன் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2007, 2013 காலகட்டத்திலும் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா இருக்கும்போது கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை மைத்ரேயனுக்கு அளித்திருந்தார்.

மைத்ரேயன் அதிமுகவில் இணைந்த பிறகு நடைபெற்ற அத்தனை பொதுத் தேர்தல்களிலும் அதிமுகவில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் மைத்ரேயனை இடம்பெறச் செய்திருந்தார் ஜெயலலிதா. டெல்லியில் தனக்கான நம்பிக்கையான நபராக மைத்ரேயனை வைத்திருந்தார் ஜெயலலிதா.

அதிமுக அணிகளுக்குள் மாறி மாறி பல்டி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன். பின்னர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தபோதும், 2019ல் மைத்ரேயனுக்கு மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து, கடந்த 2022 அக்டோபரில் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார் மைத்ரேயன்.

பாஜகவில் இணைந்தார்

23 ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்து வந்த மைத்ரேயன், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி, டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பாஜக பட்டாளம்

பாஜகவில் இணைந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், "23 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன். பாஜக பல சாதனைகளைச் செய்திருக்கிறது. பாஜக பட்டாளத்தில் ஒருவனாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவே நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணிகளைச் செய்து வருகிறார். அவருடன் இணைந்து செயல்படுவேன்." எனத் தெரிவித்திருந்தார். மைத்ரேயனுக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை வழங்கி இருந்தது பாஜக தலைமை.

மீண்டும் அதிமுகவுக்கு தாவல்

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி மைத்ரேயன் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் பெரும் எதிர்பார்ப்புடன் மைத்ரேயன் இணைந்த சூழலில், அவருக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அதிமுகவில் இணைந்திருந்தார் மைத்ரேயன்.

எடப்பாடி பழனிசாமியிடம், தான் மீண்டும் அதிமுகவில் இணைய விரும்புவதாக கூறி கடிதம் அளித்தார் மைத்ரேயன். அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மைத்ரேயனை தனது வீட்டுக்கு வரவழைத்துச் சந்தித்ததோடு, அவரை கட்சியிலும் இணைத்துக் கொண்டார்.

திமுகவுக்கு தாவிய மைத்ரேயன்

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் புதன்கிழமை இணைந்தார். கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார்.

மைத்ரேயன் அரசியல் டிராவல்

ஆர்.எஸ்.எஸ், அதன் வழியாக பாஜக, அங்கிருந்து அதிமுக. அதிமுகவில் ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி, மறுபடி ஓபிஎஸ் அணி, பிறகு பாஜக - அதன் பிறகு அதிமுக இப்போது திமுக என ரிப்பீட் மோடில் அரசியல் பயணம் செய்துள்ளார் மைத்ரேயன். திமுகவில் இப்போதுதான் முதல் முறையாக இணைந்துள்ளார் மைத்ரேயன். ஆனால், அதிமுக - பாஜகவில் மாறி மாறி பல்டி அடித்திருக்கிறார். இனி மைத்ரேயன் எந்தக் கட்சிக்கு செல்லக்கூடும் என கமெண்ட் பண்ணுங்க.. வாசகர்களே..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+