சென்னை விமானத்தில் செல்போனை தவறவிட்ட ஓபிஎஸ்.. கெடுபிடி காட்டிய ஏர்போர்ட் மேனேஜர்.. என்ன நடந்தது?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தனது செல்போனை தவற விட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறிய பிறகுதான் அவர் செல்போனை தவறவிட்டதை கவனித்தார். இதையடுத்து விமானத்தில் சென்று செல்போனை எடுத்த போதும், உடனே கொடுக்காமல் ஏர்போர்ட் மேனேஜர் கெடுபிடி காட்டியதால், ஓபிஎஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நேற்று மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஓ பன்னீர் செல்வம் தனது காரில் ஏறிய பிறகு, செல்போன் மிஸ் ஆனதை கவனித்தார். விமானத்தின் சீட்டிலேயே செல்போனை மறந்து வைத்தது உடனடியாக ஓ பன்னீர் செல்வத்திற்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார்.

விமானத்தில் இருக்கும் செல்போனை எடுத்து தருமாறு போலீசாரிடம் கேட்டார். போலீசார், உடனடியாக விமான நிலைய மேனேஜரிடம் சென்று தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஓ பன்னீர் செல்வம் இருந்த விஐபி பகுதிக்கான இடத்தில் தேடி பார்த்தனர். இதில் செல்போன் அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து விமானத்தில் சென்று தேடி பார்த்தனர். இதில், ஓ பன்னீர் செல்வம் அமர்ந்து இருந்த இருக்கையில் செல்போன் கிடந்ததை கண்டறிந்தனர்.
அந்த செல்போனை எடுத்து விமான ஊழியர்கள் ஏர்போர்ட் மேனேஜரிடம் ஒப்படைத்தனர். எனினும், விமானத்தில் தவறவிட்ட பொருட்களை திரும்ப அளிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதனை பின்பற்றி மட்டுமே செல்போனை திரும்ப அளிப்பேன் என ஏர்போர்ட் மேனேஜர் ஸ்டிரிட்க் ஆக கூறினார்.
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் மதுரையில் இருந்து சென்னை வந்த போர்டிங் பாஸ் மற்றும் அவரது கையெழுத்து ஆகியவற்றை போலீசார் வாங்கி சென்றனர். பின்னர் உங்கள் செல்போன் தருவதற்கு சிறிது நேரம் எடுக்கும் அதுவரைக்கும் காத்திருக்க வேண்டாம்.. நீங்கள் வீட்டிற்கு புறப்படுங்கள்.. நாங்களே கொண்டு வந்து தருகிறோம் என போலீசார், ஓ பன்னீர் செல்வத்திடம் கூறினர்.
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு சென்னை ஏர்போர்ட் மேனேஜரிடம் உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு செல்போன் ஒருமணி நேரம் கழித்து திருப்பி கொடுக்கப்படது. இதை வாங்கிக் கொண்ட போலீசார் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு செல்போனை கொடுத்து அனுப்பினர்.












Click it and Unblock the Notifications