தாயார் மறைவு.. அண்ணன் எனக் குறிப்பிட்டு ஓபிஎஸ்-க்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவு அடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும், ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95). வயோதிகம் காரணமாக இவருக்கு கடந்த மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பழனியம்மாள் வீடு திரும்பினார்.

தீவிர சிகிச்சை
இந்த நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, பழனியம்மாள் கடந்த 22 ஆம் தேதி தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது தாயாரை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் முதலவர் ஓ பன்னீர் செல்வம் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தாயாரையும் நேரில் சென்று பார்த்தார்.

மீண்டும் கவலைக்கிடம்
இதற்கு இடையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஓ பன்ன்னீர் செல்வம் தரப்புக்கு பின்னடைவாக வந்த தீர்ப்பு வந்தது. இதனால், சென்னை புறப்பட்ட ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று பழனியம்மாள் நாச்சியார் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

பழனியம்மாள் உயிரிழந்தார்
பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது. தாயார் மறைவு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று நடைபெறுகிறது. தாயார் மறைவு செய்தி கேட்டதும் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தேனிக்கு விரைந்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.
ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications