அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜர்
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்காக இன்று ஆஜராகி உள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் முதலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். 2022ம் ஆண்டு முதல் போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் செயல்பட்டு வந்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் தான் போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது மகனுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உதவி இன்ஜினியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். இந்த பணத்தை 2023 முதல் 2025ம் ஆண்டு காலக்கட்டத்தில் வெவ்வேறு தவணைகளில் அரியலூரை சேர்ந்த இளஞ்செழியனிடம் வழங்கினேன்.
ஆனால் அவர் வேலையும் வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் மீண்டும் தரவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி பணத்தை திரும்ப பெற்று தந்து இளஞ்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த புகாரை தொடர்ந்து கடந்த வாரம் இளஞ்செழியன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மாவட்ட கல்வி அதிகாரி என்று போலி அடையாள அட்டை வைத்திருந்ததும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உடன் தனக்கு நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும் கூறி மோசடி செய்திருந்தது தெரியவந்துள்ளது. இவரை காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாஜி அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதில் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக சிவசங்கரிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி விசாரணைக்கு ஜுலை 1ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை தொடர்ந்து சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அலுவலகத்தில் மாஜி அமைச்சர் சிவசங்கர் தனது வழக்கறிஞருடன் ஆஜராகி உள்ளார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications