முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவு.. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சென்னை: தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக இவரது ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
இருவேறு வழக்குகளில் மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், இந்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உறவினர்கள்
இதையடுத்து தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 4 பேரை பிடிக்கும் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களை போலீசார் இன்று கைது செய்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் யாரையும் சட்டத்துக்கு முரணான வகையில் தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

மேல்முறையீடு
இதற்கிடையே தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அதற்குள் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்யவும் தமிழ்நாடு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications