மேட்டர் ரொம்ப சீரியஸ்.. நிபா வைரஸ் ஆபத்து: சுகாதாரத்துறைக்கு மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அலர்ட் மெசேஜ்
சென்னை: நிபா வைரஸ் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரளா சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்துகொண்டு பணியாற்றவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் தமிழக அரசு சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைகளில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரைக் கண்காணிக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து வருவோரைக் கண்டறிந்து அவர்கள் குறித்த விபரங்களைக சேகரித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கோட்டில் இருக்கும் பல பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல நிபா வைரசால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 789 பேர் இப்போது கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், நிஃபா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸுடன் தொடர்புடைய இரண்டு இறப்புகள் கவலையளிக்கின்றன. இது காற்றில் பரவவில்லை என்றாலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய தொற்றுநோயாகும்.
கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது மிக முக்கியமானது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அறிகுறிகளைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்தவும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தவும் வேண்டும்" என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications