எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு, இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாமகவில் எம்.எல்.ஏவாக இருந்த தமிழரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்திருந்தார். இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். ஓமலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தமிழரசு, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் திமுகவில் இருந்து இன்று விலகி, அதிமுக-வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் அதிமுக-வில் இணைத்து கொண்டார்.

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை தமிழரசு நேரில் சந்தித்து ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் முக்கிய பொறுப்போ, சீட்டோ தரப்படாத நிலையில் அதிருப்தி அடைந்த தமிழரசு திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு பேட்டியளித்தார். அப்போது, "பாமகவில் இருந்து 2014 ஆம் ஆண்டு வெளியேறினேன். பாட்டாளி மக்கள் கட்சியிலும், வன்னியர் சங்கத்திலும் 42 ஆண்டு காலம் பயணித்துள்ளேன். 2019 ஆம் ஆண்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தோம். அனைவரையும் பாதுகாக்கிறோம், வரவேற்கிறோம் என்று உறுதியளித்தார்கள்.
ஆனால் ஏழு ஆண்டு காலத்தில் திமுகவில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை. இதன் காரணத்தால் திமுக-விலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதாக தெரிவித்தார். சேலத்தில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பிரிவினையை ஏற்படுத்தினார். திமுக ஆட்சி அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய லட்சியம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications